Last Updated : 17 Nov, 2025 12:33 PM

 

Published : 17 Nov 2025 12:33 PM
Last Updated : 17 Nov 2025 12:33 PM

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின் விளை​யாடு​வதற்​காக மீண்​டும் ஸ்கூல் மைதானத்​துக்கு வந்​தோம். இவன் அங்கு நின்​றிருந்​தான்! “என்​னடா இங்க நிற்​கிற? என்று கேட்​டோம். “இல்​ல​டா, நயி​னார் வாத்​யார் என் தலை​யில அடிச்​சிட்​டார். அதனால ஹெட்​மாஸ்​டர்​கிட்ட கம்ப்​ளைன்ட் பண்ண போறேன், அதுக்​குத்​தான் நிற்​கிறேன். என் தலை​யில ரத்​தம் வருதா பாரு?” என்று கேட்​டான்.

நான் பார்த்த போது ஒரு துளி ரத்​தமில்​லை! அவனை பயமுறுத்​து​வதற்​காக ‘என்​னடா இவ்​வளவு ரத்​தம்” என்று சொன்​னேன். அதை நிஜம் என்று நம்​பி, ‘ஹெட் மாஸ்​டர்​கிட்ட கம்ப்​ளைன்ட் பண்​ணி, இனி அவர் யாரை​யும் அடிக்க விடாம பண்​றேன்” என்று காத்​திருந்​தான். “சரி, போ, உள்ள போலாம் போ” என்று சொன்​னேன். அவன், “இரு​டா... கொஞ்​சம் அழுதுக்​கிறேன்” என்று ரிகர்​சல் பார்த்​தான். பிறகு கண்​ணீரோடு அவர் அறைக்​குள் நுழைந்​தான். அங்கு அவர் இல்​லை. பின் கதவு வழி​யாக ஏற்​கெனவே வீட்​டுக்கு சென்றிருந்தார்.

ஆறரை மணி வரை அங்​கேயே நின்று வீட்​டுக்​குச் சென்​றால், “இவ்​வளவு நேரம் எங்க போயி சுத்​தி​கிட்டு வர்​ற?” என்று எனக்கு விளக்​கு​மாற்று அடி விழுந்​தது. அது ஒரு காலம். ஒவ்​வொரு முறை ஊருக்​குப் போகும் போதும் அந்த பசுமை​யான நினை​வு​கள் எனக்​குள் அமர்ந்து என்னை தூண்​டிக்​கொண்டே இருக்​கும். நடிக​னான பிறகு நண்​பர்​கள் கூடி​னால், அவனுக்கு போன் செய்​வோம். அவன் “ஓரு அதி” என்று தெலுங்​கில் ஆரம்​பிப்​பான். நாங்​கள் ஸ்கூலில் எப்​படி கிண்​டல் செய்து பேசுவோமோ, அப்​படியே பேசுவோம்.

ஊருக்கு சமீபத்​தில் சென்​றிருந்​த​போது, ரவிக்கு உடல் நலம் சரி​யில்​லை. அவன் வீட்​டுக்​குச் சென்​றும் பார்க்க முடி​யாமல் போய்​விட்​டது. பிறகு ஒரு நாள், அப்பா தவறி​விட்​டார் என்று ரவி​யின் மகன் சொன்​னான். அவனை கடைசி கட்​டத்​தில் சந்​திக்க முடி​யாமல் போனது எனக்கு வருத்​தம்​தான். இருந்​தா​லும் அது இயற்​கை. அதை ஏற்​றுக்​கொண்​டு​தானே ஆக வேண்​டும். இவனைப் போல மற்​றொரு நண்​பன் பி.​வி.​தினகரன் புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டான். நாகப்​பட்​டினத்​தில் அவன் வீட்​டில் நானும் என் மனை​வி​யும் அவனைப்​போய் பார்த்​தோம். என்​னைக் கண்​டதும் “மாப்​ள...” என்று அழு​தான்.

நான், “என்ன சாகப் போறி​யா? போ. ஏற்​கெனவே நம்ம ஃபிரண்ட்ஸ் சில பேருபோய்ட்​டாங்க. நீயும் போ. அடுத்​தால எல்​லோரும் பின்​னாலயே வரு​வோம். மேல சந்​திப்​போம். பெஞ்ச்ல உட்​கார்ந்து தோள் மேல கையை போட்​டு​கிட்​டு, நயி​னார் வாத்​தி​யார்கிட்ட அடி வாங்​கு​வோம்” என்று சொன்​னேன். சிரிக்க ஆரம்​பித்​து​விட்​டான். “என்​னடா இப்​படி சொல்​ற?“ன்னு கேட்​டான்.

“சில உண்​மை​களை யாரால​யும் தடுக்க முடி​யாது. வாழ்க்​கை​யில எல்​லாத்​தை​யும் அனுப​விச்​சாச்​சு, வேற என்ன வேணும், போயிட்டு வா?” என்று சொல்​லி​விட்டு வந்​தேன். கொரோனா பொது​முடக்க காலத்​தில் அவன் போய்ட்​டான்! இருந்த இடத்​திலிருந்தே அவனுக்கு விடை கொடுத்​தேன்.

நாம் வாழ்ந்த வாழ்க்கை இன்​னொரு முறை கிடைக்​காது. ஆனால் அந்த நினை​வு​கள் பசுமை​யாக இருக்​கும். அதை அசை போடு​வதும் பேரானந்த சுகம்​தான்! என்​னைச் சந்​திக்​கிறவர்​கள், “நெல்​லைப் பேச்சு வழக்​கை​யும், ஒரு மலை​யாளத்​துக்​காரர், தமிழ் பேசி​னால் எப்​படி​யிருக்​கும் என்​ப​தை​யும் மிகத் தத்​ரூப​மாகப் பேசுகிறீர்​களே, எப்​படி?” என்று கேட்​பது வழக்​கம். சிலர், “சார், உங்க ஊர் திருநவேலில எந்த பக்​கம்?” என்​றும் கேட்​டிருக்​கிறார்​கள்.

சென்னை வந்த புதி​தில் எனக்​குத் தஞ்​சாவூர் பேச்சு வழக்​கைத் தவிர வேறு வழக்கு தெரி​யாது. அப்​போது அக்கா ஹேம​மாலினிக்​காக, நாங்​கள் குடி​யிருந்த ராயப்​பேட்​டை​யில் இருந்து டப்​பிங் தியேட்​டருக்கு செல்ல டாக்ஸி பிடித்து வரு​வேன். அப்​போது கருப்​பு- மஞ்​சள் வண்​ணம் கொண்ட டாக்​ஸி, சென்​னை​யில் ஓடிக்​கொண்​டிருந்​தது.

எங்​கள் தெரு முனை​யில் சுந்​தர்​ராஜன் என்​பவர் டாக்​ஸி​யுடன் இருப்​பார். அவரிடம் ஒரு​நாள், “வர்​றீயளாண்​ணே?” என்​றேன். “வூடெங்​கீது?” என்று அவர் கேட்​டார். எனக்​குப் புரி​யாமல் வேறு மொழி​யில் ஏதும் பேசுகிறாரோ? என்று பார்த்​தேன். பிறகு “வூடெங்​கீதுப்​பா?” என்று மீண்​டும் கேட்​டார். புரிய​வில்​லை.

“அண்​ணே, எனக்​குத் தமிழ்​தான் தெரி​யும்” என்று சொன்​னேன். அவர் என்னை ஒரு மாதிரி​யாகப் பார்த்​து​விட்​டு, “ஐய, தமிய்​ல​தாம்பா பேசினுகீறேன்” என்​றார். “அண்ணே என்ன சொல்​றீய?” என்று கேட்​டேன். அவர், “இன்​னா​பா... உன்​னாண்ட பேஜாரக்​கீது” என்று சொல்​லி​விட்​டு, “வூடெங்​கீதுப்​பா?” என்று கையால் வீடு போன்று ஆக் ஷன் செய்து காண்​பித்​தார். பிறகு​தான், “வீடு எங்க இருக்​குன்னு கேட்​கிறீயளா?” என்று கேட்​டேன். “அத்​த​தாம்பா கேட்​டுனுக்​கீறேன்” என்​றார்.

“அத்தெ இல்​லண்​ணே, அக்​கா” என்​றேன் நான். உடனே அவர் தலை​யில் அடித்​துக் கொண்​டார். “இன்​னாப்பா பேசற நீனு, ஒன்​னி​யுமே பிரிய​மாட்​டங்​குது” என்​றார். இது​தான் சென்னை ஸ்டைல் என்​பதை புரிந்து கொண்​டேன். எனக்கு எப்​போதும் ஒரு​வரைப் பார்த்​ததுமே அவருடைய உடல் மொழி, பேச்​சு, ஆகியவை மனதில் பதிந்​து​விடும். சிலரைப் போல மோனோ ஆக்​டிங் கூட செய்​வேன். அப்​படித்​தான் எனக்​கு, சென்னை பேச்சு வழக்​கைக் கற்​றுக் கொடுத்​தது, இந்த டாக்ஸி டிரைவர் சுந்​தர​ராஜண்​ணன். அவருடன் அடிக்​கடி பேசி பழகிக்​கொண்​டேன்.

பிறகு சினி​மா​வில் நடிக்க ஆரம்​பித்​து, நான் அறியப்​பட்​ட​வ​னாக ஆனபிறகு வடபழனி விஜயா மருத்​து​வ​மனை வாசலில் சுந்​தர​ராஜண்​ணனைப் பார்த்​தேன். அவருக்​குப் பார்வை சரி​யாகத் தெரிய​வில்​லை. “அண்ணே சுந்​தர் ராஜண்​ணே” என்று அழைத்​ததும் என் குரலை அடை​யாளம் கண்​டு, “டேய் பாஸு, எப்​டிரா கீற?” என்று முன்பு பேசி​யதை போல​வே, “வாடா போடா” என்று பேச ஆரம்​பித்​து​விட்​டார். ‘இவர் நடிக​ராகி​விட்​டார், அதனால் வாடா போடா என்று அழைக்​கக்​கூ​டாது என்​கிற எண்​ணம் அவருக்​கும் இல்​லை, என்னை ஏன் அப்​படி அழைக்​கிறார் என்​கிற நினைப்பு எனக்​கும் இல்​லை. இரு​வரும் மாறாமல் இருந்​தோம்.

பிறகு டீ கடைகளுக்​குச் செல்​லும்​போது மலை​யாளி​கள் பேசும் தமிழைக் கவனித்​தேன். ஒவ்​வொரு​வர் பேசும் போதும் உடல் மொழி​யில் பேச்​சுக்​குத் தகுந்த மாதிரி அசைவு இருக்​கும். அதை கவனிப்​பதும் பிடிக்​கும். பிறகு, என் ஏரி​யா​வில் கிளன் ஆன்​டனி ஸ்மித் என்ற ஆங்​கிலோ- இந்​திய நண்​பன் இருந்​தான். அவன் தமிழ் பேசி​னால் கூட ஆங்​கிலம் வந்​து​விடும். அவனிடம் பேசி பேசி அவன் ஸ்டைலை கற்​றுக்​கொள்​ள ஆரம்​பித்​தேன்​. இப்​படி ஒவ்​வொரு​வரிட​மும்​ ஒவ்​வொன்​றைக்​ கற்​றுக்​கொண்​டேன்​.

( திங்கள்தோறும் பேசுவோம் )

முந்தைய அத்தியாயம்: காரில் வரும் மந்திரவாதி நண்பன்: பட்டாபி எனும் நான் - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 6

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x