Published : 16 Nov 2025 11:49 AM
Last Updated : 16 Nov 2025 11:49 AM

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்தவர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ். சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன. முன்னதாக, எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் ஆகியோருடன் பல நாடகங்களில் நடித்திருக்கும் இவர், சர்வாதிகாரி, பூமாலை, ஆரவல்லி உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவரது கடைசிப் படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஊர்க்காவலன்’.

தனது இறுதிக் காலம் வரை நாடகங்களில் நடித்து வந்த அவர் பெயரில் ‘எஸ்.எஸ்.சிவசூரியன் கலைக்கூடம்’ மற்றும் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் இளவரசு, எழுத்தாளர் பவா செல்லதுரை, நூற்றாண்டு விழா கொண்டாடும் எஸ்.எஸ்.சிவசூரியன் மகனும் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர்.

நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் கருணாஸ், நடிகை சச்சு, லதா, நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திர குமார், ஆனந்த் பாபு, பொன்வண்ணன், போஸ் வெங்கட், மன் உள்பட அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு எஸ்.எஸ். சிவ சூரியன் உருவப் படத்துக்கு மரியாதை செய்தனர்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக செனட் உறுப்பினரும் வழக்கறிஞருமான மீனாட்சி முருகன் வரவேற்புரை ஆற்ற, நிகழ்ச்சியை வழக்கறிஞர் அருணா அசோக் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ்.சிவசூரியன் பேரனும் வழக்கறிஞருமான சிவசூரியன் முருகன் செய்திருந்தார்.

விழாவில் நாடகக் கலைஞர் அனந்த குமாரின் ‘கலைஞன்’ எனும் தனி நபர் நாடகம் நிகழ்த்தப்பட்டது. மேலும், கலைக்கூடம் சார்பாக, 5 கலைஞர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டது. “இந்த எஸ்.எஸ்.சிவசூரியன் கலைக் கூடம் நாடகக் கலைக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் தேவையான களம் அமைக்கவும் நாடகங்கள் தயாரிப்பு மற்றும் அழிந்துவரும் கலைகளை மீட்டெடுத்து வளர்க்கும் பணிகளிலும் ஈடுபட இருக்கிறது” என்று பூச்சி எஸ்.முருகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x