Published : 15 Nov 2025 09:58 AM
Last Updated : 15 Nov 2025 09:58 AM
இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு வி.சேகர் என்ற பெயரை தெரியுமா என்பது சந்தேகமே. ஆனால், அவர்கள் சிறுவயது முதல் தொலைகாட்சி சேனல்களில் அடிக்கடி பார்த்து மகிழும் படங்களின் பட்டியலில் ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘காலம் மாறிப் போச்சு’ போன்ற படங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
எளிய, நடுத்தர மக்களின் வாழ்வியலை சோக கீதம் வாசிக்காமல், அழுது வடியாமல், நகைச்சுவை கலந்து, முற்போக்கு சிந்தனைகளை படம் முழுக்க தூவி கொடுப்பது மட்டுமின்றி, அதில் தொடர்ந்து வெற்றியும் பெறுவது சாதாரணம் அல்ல. அதனை கச்சிதமாக நிகழ்த்தி காட்டியவர் வி.சேகர்.
ஒரு சாதாரண ஓட்டு வீடு, அதில் வாழும் எளிமையான கதை மாந்தர்கள், அவர்களிடன் மகிழ்ச்சி, துக்கம், நகைச்சுவை, வளர்ச்சி, வீழ்ச்சி... இதுதான் வி.சேகரின் தாரக மந்திரம். கிட்டத்தட்ட இவரது பெரும்பாலான படங்களின் ஒன்லைன் இதுவாகத்தான் இருந்தாலும் ஒவ்வொரு படத்தின் திரைக்கதையிலும் இவர் காட்டும் வெரைட்டியே வெற்றிக்கான காரணியாக அமைந்துவிடும்.
இவருடைய படங்கள் வெளியான காலகட்டத்தையும் கவனிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கவும், பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசவும் பெரும்பாலான தமிழ் இயக்குநர்கள் தயாராகாத ஒரு காலத்தில் வி.சேகரின் படங்கள் எந்தவித பிரச்சார நெடியும் இன்றி போகிற போக்கில் கம்யூனிச, முற்போக்கு சிந்தனைகளை பேசிச் சென்றன.
‘வரவு எட்டணா செலவு பத்தணா’ படத்தில் செந்தில், வடிவேலு கதாபாத்திரங்களின் வாயிலாக மத நல்லிணக்கத்தை பேசியிருப்பார் வி.சேகர். அதேபோல ‘காலம் மாறிப் போச்சு’ படத்தில் பெண்களுக்கான சொத்துரிமைதான் கதையின் மையக்கருவாக இருந்தது. அதே படத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கும் வசனங்களும் பொட்டில் அடித்தாற்போல இடம்பெற்றிருக்கும்.
குறிப்பாக வேலைக்கு போய்விட்டு வரும் மனைவி கோவை சரளாவிடம் வடிவேலு தர்ம அடிவாங்கும் காட்சியை மறக்க முடியுமா? இதே பிரச்சினையை ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்திலும் சிறப்பாக பேசியிருப்பார். ‘நான் பெத்த மகனே’ படம், பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பேசியது.
வி.சேகர் படங்களில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு அம்சம் நகைச்சுவை. காமெடி இல்லாமல் வி.சேகரின் படங்களே இல்லை என்னும் அளவுக்கு சமூக அவலங்களை நகைச்சுவை காட்சிகளின் வழியே சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்திருப்பார். இவரது ஆஸ்தான நடிகர்கள் கவுண்டமணி, பிறகு வடிவேலு.
‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’ உள்ளிட்ட படங்களில் கவுண்டமணியின் ஆதிக்கம் என்றால், ‘காலம் மாறிப் போச்சு’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ போன்ற படங்களில் வடிவேலுவின் ராஜ்ஜியம்தான். இன்றும் இப்படங்களின் காமெடிக் காட்சிகளை ரசித்து மனம் விட்டு சிரித்து மகிழலாம்.
குறிப்பாக ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படத்தில் வாய்ச்சவடால் மட்டுமே விட்டுக் கொண்டு திரியும் அரசியல்வாதி பாக்ஸர் கிருஷ்ணன் கதாபாத்திரம், ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில் ஊரெல்லாம் கடன் வாங்கி மனைவியிடம் வீரம் காட்டும் கபாலி கதாபாத்திரம் எல்லாம் இன்றளவும் சமூக வலைதளங்களில் மீம்களில் வலம் வருகின்றன.
வி.சேகர் படங்களில் கவனிக்கத்த மற்றொரு அம்சம், அவர் எப்போதும் பெரிய நடிகர்களை தன் படங்களில் பயன்படுத்தியதில்லை என்பதுதான். நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள், அக்காலகட்டத்தில் வில்லன் நடிகர்களாக புகழ்பெற்றிருந்தவர்களே இவரது படத்தின் ஹீரோக்கள்.
‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படங்களில் அன்றைக்கு வில்லனாக கொடிகட்டி பறந்த நாசர்தான் ஹீரோ. அதே போல ஒற்றை ஹீரோவுக்காக கதை எழுதும் வழக்கத்தையும் வி.சேகர் கொண்டிருக்கவில்லை. காமெடி காட்சிகளுக்கென தனி ட்ராக்குகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கதையோடு இணைந்து பயணிக்கக் கூடிய நகைச்சுவை காட்சிகளை தன் படங்களில் இடம்பெறச் செய்தார். இதனால் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்கள் அவரது படங்களில் ஹீரோக்களில் ஒருவராக வருவார்கள். இதனால் படம் முழுக்க காமெடிக்கு பஞ்சமே இருக்காது.
அவருக்கு முன்னால் வந்த பல கமர்ஷியல் இயக்குநர்கள் கூட இன்றும் நினைவுகூரப்படும் நிலையில், இரட்டை அர்த்த வசனங்கள், குடும்பத்தோடு பார்க்கத் தயங்கும் காட்சிகள் எதுவும் இன்றி தொடர்ந்து வணிகரீதியாக வெற்றிப் படங்களை தந்த வி.சேகர் இன்றைய காலகட்டத்தில் அதிகம் பேசப்படாமல் போனது துரதிர்ஷ்டவசமான ஒன்று.
2000-களின் தொடக்கத்திலேயே இயக்குவதை நிறுத்திக் கொண்ட வி.சேகர், 2010-ல் கன்னடத்தில் ஒரு படம் இயக்கினார். அது பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. பின்னர் திரை வாழ்வில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், அண்மையில் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்திருந்தார்.
கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வி.சேகர், நவம்பர் 14-ம் தேதி காலமானார். அவருடைய திரைப்படங்களும், அதில் துணிச்சலுடன் அவர் பேசிய சமூகக் கருத்துகளும் காலங்கள் கடந்தும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT