Last Updated : 14 Nov, 2025 04:09 PM

 

Published : 14 Nov 2025 04:09 PM
Last Updated : 14 Nov 2025 04:09 PM

‘காந்தா’ விமர்சனம்: துல்கர் சல்மான் மிளிரும் பீரியட் டிராமா எப்படி?

துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிப்பவை. அவ்வப்போது சில சறுக்கல் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதை சரிசெய்யும் விதமான வெரைட்டியான கதைகளை தொடர்ந்து கொடுத்து வருபவர். இதற்கு முன்பு அவரது நேரடி தமிழ்ப் படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ அவருக்கு தமிழில் ஒரு தனி இடத்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு அவர் மறுபடியும் நடித்திருக்கும் நேரடி தமிழ்ப் படம்தான் ‘காந்தா’.

படத்தின் தொடக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது. கட் செய்தால் மாடர்ன் ஸ்டுடியோஸ் உரிமையாளர் மார்ட்டின் (ரவீந்திர விஜய்), அய்யா என்று அனைவராலும் மதிக்கப்படும் இயக்குநரிடம் (சமுத்திரக்கனி) ஏற்கெனவே படப்பிடிப்பு நடந்து பின்னர் கைவிடப்பட்ட தன் படத்தை மீண்டும் எடுக்கலாம் என்று கூறுகிறார். அந்த காலகட்டத்தில் நடிப்புச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் உச்ச நட்சத்திரமான டி.கே.மகாதேவனுக்கும் (துல்கர் சல்மான்) அய்யாவுக்கும் இடையே நடந்த ஈகோ மோதலே அப்படம் ட்ராப் ஆன காரணம். மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அய்யா எழுதிய காட்சிகளை தன் இஷ்டத்துக்கு மாற்றுகிறார் ஹீரோ மகாதேவன். படத்தின் டைட்டிலையும் ‘காந்தா’ என்று மாற்றச் செய்கிறார். பர்மாவில் இருந்து அகதியாக வந்த பெண்ணான குமாரியை (பாக்யஸ்ரீ போர்ஸ்) தன் மகளை போல வளர்க்கும் அய்யா, அவரையே படத்தின் ஹீரோயின் ஆகவும் ஆக்குகிறார். அய்யாவையும், மகாதேவனையும் மீண்டும் ஒன்றுசேர்க்க முயற்சிக்கும் குமாரி, மகாதேவன் மீது காதலில் விழுகிறார். அய்யாவுக்கும் மகாதேவனுக்கும் இடையிலான மோதலுக்கான காரணம் என்ன? இருவருக்குமான ஈகோ மோதலில் படப்பிடிப்பு முழுமையாக நடந்ததா என்பதே ‘காந்தா’ படத்தின் திரைக்கதை.

ரெட்ரோ படங்கள் என்றாலே பார்வையாளர்களுக்கு எப்போதும் அதன்மீது ஓர் ஈர்ப்பு உண்டு. காரணம், நாம் பார்க்காத விஷயங்களை, அல்லது புத்தகங்களின் வாயிலாக மட்டுமே தெரிந்துகொண்ட காலகட்டத்தை திரையில் பார்க்கும் அனுபவமே அலாதியானது. அந்த வகையில் 1950களின் தமிழ் சினிமாவை விஷுவலாக கண்முன்னே கொண்டு வருகிறது ‘காந்தா’.

விண்டேஜ் சென்னை, பரபரப்பான ஸ்டூடியோக்கள், அக்கால சினிமா எடுக்கும் பாணி என பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்கள். முக்கால்வாசி படமும் ஸ்டூடியோவுக்குள் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பார்வையாளர்களுக்கு விஷுவல் பிரம்மாண்டத்தை கடத்த தவறவில்லை.

முதல் சில நிமிடங்கள் மெதுவாக தொடங்கி நகர்ந்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் நம்மை உள்ளே இழுத்துக் கொள்கின்றன. துல்கர் சல்மான் - சமுத்திரக்கனி இடையிலான புகைச்சல்கள், ஸ்டூடியோவில் இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்கள், இடையில் பாக்யஸ்ரீ உடனான லவ் டிராக், அவ்வப்போது நான் லீனியரில் சொல்லப்படும் ப்ளாஷ்பேக் என இடைவேளை வரை நம் கவனத்தை அங்கிமிங்கும் சிதறவிடாமல் படம் சுவாரஸ்யத்துடன் நகர்கிறது,

டி.கே.மகாதேவனாக துல்கர் சல்மான். எந்தவித குறையும் சொல்லிவிடமுடியாத நேர்த்தியான நடிப்பு. தன் குருவிடமே ஈகோ காட்டும்போது, நாயகியிடம் காதலில் உருகும்போதும் என படம் முழுக்க மிளிர்கிறார். அவருக்கு இணையான கதாபாத்திரம் சமுத்திரக்கனி உடையது. தலைக்கனம் கொண்ட அந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய நிறைவான பங்களிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார். பாக்யஸ்ரீ போர்ஸுக்கு இது பேர் சொல்லும் படமாக அமையும்.

இந்தப் படத்தின் முக்கிய பலமே கதாபாத்திர தேர்வும், நடிகர்களின் பங்களிப்பும்தான். கமர்ஷியல் அம்சங்கள் எதுவும் இல்லாத கதைக்களத்தில் நடிகர்களின் நடிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு ப்ரேமிலும் உணரமுடிகிறது. ஆனால், அது அனைத்தும் முதல் பாதியில் மட்டுமே. இடைவேளைக்குப் பிறகு ராணா எப்போது படத்துக்குள் வருகிறாரோ அதோடு படமும் படுத்துவிடுகிறது.

முதல் பாதி முழுக்க இரு முக்கிய கேரக்டர்களின் ஈகோ மோதல், அதனால் ஏற்படும் விளைவுகள் என்று செல்லும் படம், ஒரு முக்கிய கேரக்டரின் மரணத்துக்குப் பிறகு திடீரென இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் பாணிக்கு மாறுவது நெருடுகிறது. சரி, அந்த விசாரணை காட்சிகளாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. 1954-ல் வெளியான ‘அந்த நாள்’ பாணியில் விசாரணைக் காட்சிகள் வைக்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுத்துவிட்டனர். இதில் ராணாவின் ஓவர் ஆக்டிங் கூடுதல் இம்சை. அநியாயத்துக்கு நடித்திருக்கிறார். ஒட்டுமொத்த படத்தில் ஒட்டாமல் இருந்தது அவருடைய கதாபாத்திரம்தான்.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஓகே ரகம். ஒரு பீரியட் படத்துக்கு இது போதவில்லை என்ற எண்ணம் எழுகிறது. ஜானு சந்தரின் ‘பேசா மொழியே’ பாடலும் அதன் ஆக்கமும் சிறப்பு. மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

கலை இயக்குநர் ராமலிங்கத்தின் பணி அளப்பரியது. பழைய சென்னை, ஸ்டுடீயோ, சமுத்திரக்கனியின் வீடு, துல்கரின் வீடு என உழைப்பை கொட்டியிருக்கிறார். குறிப்பிட்டு பாராட்டப்படவேண்டியவர் ஸ்பெயின் ஒளிப்பதிவாளர் டானி சான்செஸ் லோபஸ். இவ்வளவு ‘மிரர் ஷாட்’களை எந்த தமிழ்ப் படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. அந்த அளவுக்கு நேர்த்தியான ஃப்ரேம்கள். துல்கர் கண்ணாடியை நோக்கி பேசிக் கொண்டே வந்து பின்னர் அதில் முட்டிக் கொள்ளும் ஒரு காட்சி உதாரணம். பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய மேக்கிங்.

இரண்டாம் பாதியில் நிகழ்ந்த சொதப்பலால் இவை அனைத்தும் வீணாகிவிட்டதோ என்று தோன்றாமல் இல்லை. லாஜிக்கே இல்லாத காட்சிகள், எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு திருப்பம் என அலட்சியமாக எழுதப்பட்டிருக்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை. அவ்வளவு நேரம் எலியும் பூனையுமாக மோதிக் கொண்டிருந்த துல்கர் - சமுத்திரக்கனி இருவரும் ஓர் அறையில் ராணா விசாரிக்கும் காட்சியில் மனம் உணர்ந்து பேசுவதெல்லாம் ஏற்கும்படி இல்லை. கொலைக்கான காரணமும் படத்தின் காலகட்டத்தைப் போலவே அரதப் பழைய ஐடியா.

முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதியிலும் தக்க வைத்து, சடாரென ஜானரை மாற்றாமல் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு சென்றிருந்தால் சர்வதேச தரத்திலான ஒரு சினிமாவாக வந்திருக்கும். ஆனால் இரண்டாம் பாதி எங்கெங்கோ சென்று குழப்பியதால் சுமாரான படமாக மாறி நிற்கிறது இந்த ‘காந்தா’

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x