Last Updated : 13 Nov, 2025 06:49 PM

 

Published : 13 Nov 2025 06:49 PM
Last Updated : 13 Nov 2025 06:49 PM

“நாடகம், தெருக்கூத்துக் கலைஞர்களை பாதுகாப்பது அவசியம்” - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

புதுச்சேரி: “நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். நமக்கு பழமையான வரலாறு உண்டு. வெளிநாட்டவர் தங்களது சரித்திரத்தை பாதுகாக்கின்றனர். நாம் சரித்திரத்தை பாதுகாக்கவில்லை” என்று திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் பெப்சி தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் புதுச்சேரி மாநிலக் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நாடக தந்தை தவத்திரு சங்கர்தாஸ் சுவாமிகள் 103-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்சி தலைவரான இயக்குநர் ஆர்,கே.செல்வமணி பேசியது: “தெருக்கூத்தும், நாடகமும் திரைப்படங்களுக்கு முன்னோடி வடிவம். இதில் உள்ளோர் திரைத்துறையினருக்கு ரத்த உறவு.

கூத்து கலைஞர்களை அப்போது கூத்தாடிகள் என்று சொல்வார்கள். அவர்கள்தான் நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கடத்தியவர்கள். மகா பாரதம், ராமாயணம், நல்ல தங்காள் போன்ற கதைகளையும் நம் பண்பாட்டையும் தெருக்கூத்து கலைஞர்கள் பல நூற்றாண்டுகளாக மக்களிடம் கொண்டு சென்றனர். கூத்தாடி என சொல்வது சிவனை நினைவுப்படுத்தும் சொல். கலையை தன்னகத்தே வைத்துள்ள கலைஞர்கள் இவர்கள்.

மனஅழுத்தத்தில் இருந்து விடுபட கலைதான் உதவுகிறது. கலைதான் கரோனாவில் மக்களை காப்பாற்றியது. மனிதர்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. மனிதர்களை சந்தோஷப்படுத்துவது கலைதான். வடிவம் மாறினாலும் தெருக்கூத்தை மாற்றி அடுத்த படிவமான நாடகமாக சங்கரதாஸ் சுவாமிகள் மாற்றினார்.

நாடகம் திரைப்படமானது, நாடகம், தெருக்கூத்து என கவனிக்கப்படாத கலைஞர்களை பாதுகாப்பது அவசியம். நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். நமக்கு பழமையான வரலாறுண்டு. வெளிநாட்டவர் தங்களது சரித்திரத்தை பாதுகாக்கின்றனர். நாம் சரித்திரத்தை பாதுகாக்கவில்லை. சந்திரலேகா, அவ்வையார் என பழமையான படங்கள் நெகட்டிவ் இல்லை. வெளிநாட்டிலோ பழங்கால படங்களில் காஸ்டியூம் தொடங்கி திரைப்படங்களின் நெகட்டிவ் வரை பாதுகாத்துள்ளனர். நம் வரலாற்றை பாதுகாக்கும் தன்மை நமக்கும் அரசுக்கும் இல்லை" என்றார்.

முன்னதாக புதுவை காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நாடக, தெருக்கூத்து கலைஞர்கள் அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் புதுவை மற்றும் தமிழக பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து இசைக்கருவிகளை வாசித்தபடி வந்தனர்.

ஊர்வலம் கருவடிக்குப்பம் மயானத்தில் முடிந்தது. அங்கு உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் சலீம், நடிகர் - இயக்குநர் போஸ் வெங்கட், கலை இலக்கிய பெருமன்றம் எல்லை சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x