Published : 11 Nov 2025 04:48 PM
Last Updated : 11 Nov 2025 04:48 PM

‘காந்தா’ படத்துக்கு தடை கோரிய வழக்கு: தயாரிப்பு நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘காந்தா’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்குக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கொச்சியைச் சேர்ந்த Wayfarer Films Private Limited மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த Sprit Media Private Limited ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து காந்தா என்ற பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ளன.

இந்தப் படம், எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், நவ.14-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதாக இருந்தால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் அனுமதி பெற வேண்டும்.

படத்தில், கதாபாத்திரங்களின் பெயர்களை மாற்றியிருந்தாலும் கூட, அதனை மக்கள் நினைவு கூர முடியும். பாகவதர் ஒழுக்கமின்றி வாழ்ந்ததாகவும், கண் பார்வை இழந்ததாகவும், கடைசிக் காலத்தில் வறுமையில் சிக்கி, கடனாளியாக இறந்ததாக படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாறாக, அவர் சொந்தமாக பங்களா வைத்திருந்ததாகவும், பிளைமுத் மற்றும் செவ்ரலட் போன்ற விலை உயர்ந்த கார்களை வைத்திருந்ததாகவும், எந்த கெட்ட பழக்கமும் அவருக்குக் கிடையாது. அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், அவதூறான முறையில் சித்தரித்து தயாரிக்கப்பட்டுள்ள ‘காந்தா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.” என மனுவில் தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை நகர 7-வது உதவி உரிமையியல் நீதிமன்றம், நவ.18-ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x