Published : 11 Nov 2025 11:47 AM
Last Updated : 11 Nov 2025 11:47 AM
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2025-ம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அதில், “தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டங்களில் நடிகர்கள் பங்கேற்க வேண்டும்” என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சில முக்கிய தீர்மானங்கள்: தமிழ் படங்களில் பணியாற்றும் நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலர், தயாரிப்பாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கு மாறாக, வெப்தொடர்களில் அதிகமாக நடிக்கிறார்கள். இதனால், பொதுமக்களிடம் படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. இதன் காரணமாக திரைத்துறைக்கு மட்டுமின்றி, அரசுக்கும் வருமான இழப்பு ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்டவர்கள், வெப்தொடர்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவ்வாறு செயல்படாதவர்களுக்கு சங்கங்கள் பணி ஒத்துழைப்பு வழங்கக்கூடாது, சம்பந்தப்பட்டவர்களின் படங்களைத் திரையிடக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. தமிழ் படவுலகில் ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மற்ற மாநிலங்களில் இருப்பது போல் நடிகர்கள், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ரெவ்னியூ ஷேர் அடிப்படையில் அதாவது பட வியாபாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டங்களில் பங்கேற்க வேண்டும். இனி வரும் காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் ‘ரெவ்னியூ ஷேர்’ அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படும்.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும். திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது திரைப்பட அமைப்புகள் இணைந்து சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும். முன்னணி நடிகர்களின் படங்கள் 8 வாரங்கள் கழித்தும், அடுத்த நிலை நடிகர்களின் படங்கள் 6 வாரங்கள் கழித்தும், சிறுமுதலீட்டு படங்கள் 4 வாரங்கள் கழித்தும் ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும். 2026-2029-ம் ஆண்டுகளுக்கான தயாரிப்பாளர் சங்க தேர்தல் டிசம்பர் மாதம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT