Published : 09 Nov 2025 12:13 PM
Last Updated : 09 Nov 2025 12:13 PM
பாமா விஜயம், நரகாசுவர வதம், கிருஷ்ண துலாபாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்சம் மாற்றி உருவான படம், ‘பாரிஜாதம்’.
முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்களிடமிருந்து பெற்ற வரங்களால் யாராலும் வெல்ல முடியாத சக்திகளைக் கொண்டிருக்கிறான், நரகாசுரன். அவனை யாராலும் அடக்க முடியவில்லை. எப்படி அடக்குவது என்றும் தெரியவில்லை. அவனுடைய முற்பிறப்பில் நரகாசுரனின் தாயாக இருந்த, இப்போது கிருஷ்ணரின் மனைவிகளில் ஒருவரான பாமாவால் அடக்க முடியும் என்று நினைக்கிறார் நாரதர். அதற்கான வேலைகளில் இறங்கும் அவர், அதைச் செய்து முடிப்பது ஒரு கதை.
மற்றொரு கதையில் அரிய பாரிஜாதப் பூவை ருக்மணிக்குக் கொடுக்குமாறு கிருஷ்ணனிடம் கொடுக்கிறார் நாரதர். இதனால் பாமாவுக்கு கோபம் வருகிறது. கிருஷ்ணன் மீது ருக்மணி கொண்டிருக்கும் பக்தி மற்றும் காதலை பாமாவுக்கு உணர்த்துவது இக்கதை. மூன்றாவது பகுதியில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளி மூட்டை ராமசாமி, காகா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் காமெடி கதை இடம்பெற்றது. மூன்று கதையிலும் ‘பாரிஜாதம்’ முக்கிய பங்கு வகிக்கிறது.
கிருஷ்ணராக டி.ஆர்.மகாலிங்கமும், அவருடைய மனைவிகள் சத்யபாமாவாக பி.எஸ்.சரோஜாவும், ருக்மணியாக எம்.வி.ராஜம்மாவும் நடித்தனர். நாரதராக நாகர்கோவில் மகாதேவன் நடித்தார். அந்த காலகட்டத்தில் பிரபல குணச்சித்திர நடிகராக இருந்த ஆர்.பாலசுப்பிரமணியம் நரகாசுரனாக மிரட்டியிருந்தார். பத்மினி - லலிதா சகோதரிகளின் நாட்டியமும் படத்தில் உண்டு. தனது லாவண்யா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.கே.சுந்தரராம ஐயர் இப்படத்தைத் தயாரித்தார். இளங்கோவன் திரைக்கதை, வசனம் எழுதினார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (கற்பகம் படத்தை இயக்கியவர் அல்ல) இயக்கிய இந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்புராமன், எஸ்.வி.வெங்கட்ராமன் ஆகியோர் இசையமைத்தனர். படத்தில் 21 பாடல்கள். கம்பதாசன், சந்தானகிருஷ்ண நாயுடு, பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, கே.டி.சந்தானம் பாடல்கள் எழுதினர்.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இணைந்து ‘பாரிஜாதப் பூ’ என்ற பாடலைப் பாடினர். அப்பாடல் அப்போது ரசிக்கப்பட்டது. பசுவின் பெருமையைச் சொல்லும் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் என்.எஸ்.கிருஷ்ணன். ‘பாதுகாக்கணும் பாங்கு பார்க்கணும் பழக்கி வைக்கணும்’ என்ற பாடல் அப்போது ஹிட் லிஸ்டில் இருந்தது. பக்தி படம் என்றாலும் பகுத்தறிவு கருத்துகளைக் கொண்டு என்.எஸ்.கிருஷ்ணன் அமைத்திருந்த நையாண்டி நகைச்சுவைக் காட்சிகள் அப்போது ரசிக்கப்பட்டன. போலி நாரதராக புளிமூட்டை ராமசாமி நடித்தார். ‘பாரிஜாதம்’ பூவுக்குப் பாரியும் சாதமும் என அவர் கொடுக்கும் விளக்கம் குபீர் நகைச்சுவை. ஜித்தன் பானர்ஜி ஒளிப்பதிவு செய்தார். 1950-ம் ஆண்டு இதே தேதியில் (நவ.9) வெளியான இந்தப் படம், வரவேற்பைப் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT