Published : 08 Nov 2025 01:14 PM
Last Updated : 08 Nov 2025 01:14 PM
இந்த ஆண்டு (2025), ஜனவரி முதல் அக்டோபர் வரை 231 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை சாதனை படைக்கும் என்று தெரிகிறது.
தமிழ் சினிமாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை, கரோனா காலகட்டத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் வந்த பிறகு, படம் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் எளிதாகி இருப்பதால் சிலர் சொந்தமாகத் தயாரித்து இயக்கத் தொடங்கியுள்ளனர். ‘திரைப்படங்கள் ஓரளவு பேசப்பட்டால் போதும், ஓடிடி-யில் விற்று விடலாம்’ என்ற நம்பிக்கையிலும் சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிப்பது அதிகரித்து வருகிறது.
தயாரிப்புச் செலவைக் குறைப்பதற்காக, பல தொழில்நுட்ப விஷயங்களைக் குறைந்த செலவில் பயன்படுத்த முடியும் என்பதும் இதற்குக் காரணம் என்கிறார்கள். ரூ.50, 60 லட்சத்தில் படங்களைத் தயாரிக்க முடியும் என்பதால் வசதியானவர்கள், தாங்களே ஹீரோவாக நடித்து தயாரித்து வருவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த வருடம் ஜனவரியில் இருந்து அக்டோபர் 31-ம் தேதி வரை, 231 - திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் வரை, இந்த எண்ணிக்கை 206 -ஆக இருந்தது. இந்தாண்டு அதிகரித்திருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கிற 231 படங்களில் 23 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. மதகஜராஜா, டிராகன், குடும்பஸ்தன், பயர், மர்மர், பெருசு, குட் பேட் அக்லி, லெவன், ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி, மாமன், குபேரா, டிஎன்ஏ, மார்கன், 3பிஎச்கே, பறந்து போ, தலைவன் தலைவி, மாரீசன், கூலி, சக்தி திருமகன், இட்லி கடை, டியூட், பைசன் ஆகிய 23 படங்கள் வணிக ரீதியான வெற்றியை பெற்றுள்ளன என்கிறார்கள். வெற்றி சதவிகிதம் 231 திரைப்படங்களில் 10 சதவீதம் மட்டுமே!
கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 26 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ‘இட்லி கடை’, ‘டியூட்’, ‘பைசன்’ மொழிமாற்று படமான ‘காந்தரா: சாப்டர் 1’ ஆகிய படங்கள் அதிகம் வசூலித்துள்ளன. இதில் ‘டியூட்’, மொத்தம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. ‘காந்தாரா: சாப்டர் 1’, தமிழில் மட்டும் ரூ.72 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 2 மாதம் இருப்பதால், வெளியாகும் படங்களின் எண்ணிக்கை முந்தைய வருடங்களை விட அதிகரிக்கும் என்று தெரிகிறது. அதாவது நவம்பரில் மட்டும் 20 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் 20-ல் இருந்து 25 படங்கள் வரை வெளியாக வாய்ப்பிருக்கிறது. அப்படியென்றால் இந்த வருடம் 276 படங்கள் வெளியாகி சாதனைப் படைக்கும் என்கிறார்கள். இதற்கு முன் தமிழில் இத்தனைப் படங்கள் வெளியாகவில்லை.
“சினிமா இப்போது எளிதாகிவிட்டது. சுதந்திரமான ஒன்றாகிவிட்டது. சாதாரண கேமரா மூலம் எங்காவது ஓர் ஊரிலிருந்து கொண்டு சினிமா எடுத்துவிட முடியும். ஆனால் இதில் பல திரைப்படங்கள் சினிமாவுக்கான எந்த தரமும் இல்லாதவை. ஆனாலும் இப்படங்களும் கணக்கில் வந்து விடுகின்றன. இந்த எண்ணிக்கையில் சுமார் 150 படங்கள் மட்டுமே திரைப்படத்துக்கான இலக்கணத்துடன் உருவானவையாக இருக்கும். மற்றவை குறும்படம் எடுப்பதற்குப் பதில் திரைப்படம் எடுத்ததாகவே கொள்ள முடியும். இதனால் திரைத்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் பார்வையாளர்கள் சோர்வடைவார்கள்” என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT