Published : 07 Nov 2025 03:50 PM
Last Updated : 07 Nov 2025 03:50 PM

‘நாயகன்’ ரீரிலீஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ‘நாயகன்’ திரைப்படத்தின் ரீரிலிஸுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்' திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடர்ந்துள்ள வழக்கில், ‘நடிகர் கமல்ஹாசன், சரண்யா உள்ளிட்டோர் நடித்த ‘நாயகன்’ திரைப்படத்தை எனது நிறுவனம், ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தை வெளியிடும் உரிமையை கடந்த 2023-ல் பெற்றுள்ளது.

இதை மறைத்து, வி.எஸ். ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ‘நாயகன்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது முறைகேடான நடவடிக்கையாகும். எனவே, ‘நாயகன்’ திரைப்படத்தை மறு வெளியீடு செய்யப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும். மறு வெளியீடு மூலம் வசூலான தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வி.எஸ். இன்டர் நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ‘படத்தை மறு வெளியீடு செய்ய அதிகாரபூர்வமான ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது. காப்புரிமை சட்டம் எதுவும் மீறப்படவில்லை’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, படத்தை வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x