Published : 06 Nov 2025 05:35 PM
Last Updated : 06 Nov 2025 05:35 PM

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸில்டா மனு!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்கு, பதில் அளிக்க காவல் துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையை சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கிவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நான் அளித்த புகாரில், மோசடி மற்றும் மிரட்டல், கொடுமைப்படுத்துதல் கருச்சிதைவை ஏற்படுத்துதல், மின்னணு பதிவுகளை் அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் புகார் அளித்தேன். நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யாமல், காவல் துறை விசாரணை நடத்தி உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘காவல் துறையின் விசாரணை திருப்திகரமாக இல்லை. கடந்த ஒன்றரை மாதமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது காவல் துறையின் செயலற்ற தன்மையை காண்பிக்கிறது. காவல் துறை உரிய முறையில் விசாரணை நடத்தாததால் தான், மகளிர் ஆணையத்தில் புகார் செய்தேன். காவல் துறை மெத்தனமாக உள்ளது. நம்பகத்தன்மையுடன் விசாரணை நடைபெறவில்லை. இவர் பிரபல சமையல் கலைஞர் என்பதனால் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளின் குடும்ப திருமண நிகழ்வுகளில் இவரது கேட்டரிங் சேவையை பயன்படுத்துவதால் காவல் துறை பாரபட்சமாக விசாரணை நடத்துகிறது. எனவே, மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 12-ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x