Published : 04 Nov 2025 10:09 AM
Last Updated : 04 Nov 2025 10:09 AM
ஒவ்வொரு சீசனிலும் தவறாமல் நடக்கும் ஒரு நிகழ்வு இந்த சீசனிலும் அரங்கேறி இருக்கிறது. அது வைல்டு கார்ட் போட்டியாளர்களின் என்ட்ரி. பழைய போட்டியாளர்கள் பெரும்பாலும் சமூக வலைதள பிரபலங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்ததாலோ என்னவோ, வைல்டு கார்ட் மூலம் இறக்கிவிடப்பட்டுள்ள போட்டியாளர்கள் நால்வருமே விஜய் டிவி தயாரிப்புகளாவே இருந்துவிட்டனர்.
சீரியல் நடிகர் அமித் பார்கவ், தொகுப்பாளரும் நடிகருமான பிரஜின், அவரது மனைவி சாண்ட்ரா ஏமி, சீரியல் நடிகை திவ்யா. இதில் பிரஜின், சாண்ட்ரா இருவரும் ஜோடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அதிலும் பிரஜின், தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர் வேறு. மேடையிலேயே இருவரும் ‘மச்சான்’ என்று உரிமையுடன் பேசிக் கொண்டது ரசிக்கும்படி இருந்தது.
வழக்கம் போலவே வெளியிலிருந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வந்ததால் வைல்டு கார்டு போட்டியாளர்களிடம் ஒருவித அதிகாரத் தொனி வெளிப்பட்டது. குறிப்பாக பிரஜின், சாண்ட்ரா இருவருமே வீட்டுக்குள் நுழைந்த உடனேயே பழைய போட்டியாளர்களை ‘வைத்து செய்ய’ தொடங்கினர்.
பிக்பாஸ் டீமின் அறிவுறுத்தலாக கூட இது இருக்கலாம். போட்டியாளர்களிடம் ஒரு பேப்பரை கொடுத்த அவர்களுடைய நோக்கம் என்ன என்பது குறித்து எழுத சொன்னார்கள். அவர்களை கார்டன் ஏரியாவுக்கு வரவைத்து நிற்க சொன்ன அவர்கள், முதலில் வந்த பார்வதியின் பேப்பரை படிக்காமலேயே கிழித்துப் போட்டது கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது.
இவர்கள் இப்படி என்றால், அடுத்து வந்த திவ்யா, அமித் பார்கவ் இருவரும் மிகவும் அதிகாரத் தொனியுடன் நடந்து கொண்டதாக தெரிந்தது. அமித் பார்கவ் கூட ஒரு கட்டத்துக்கு பிறகு இயல்பாகி விட்டார். ஆனால் திவ்யா யாரை எதிர்த்தால் ப்ரோமோவில் இடம்பிடிக்கலாம் என்று நன்றாக ஹோம் ஒர்க் செய்து வந்தவரைப் போல தொடர்ந்து பார்வதி, வாட்டர்மெலன் ஸ்டார் இருவரையும் டார்கெட் செய்து கொண்டிருந்தார். அதிலும் இந்த வார ‘தல’யாக நியமிக்கப்பட்ட பிறகு அவருடைய அணுகுமுறை மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது.
திவாகர், விக்கல்ஸ் விக்ரம், சுபிக்ஷா, ஆரோரா நால்வரையும் முதல் நாளே தேர்வு செய்து வெளியே படுக்க வைத்தனர். சண்டை போட்டு சமாதானம் ஆகியிருந்த பார்வதி, கம்ருதீன் இடையே கொளுத்தி போட்டனர். கனியின் ‘அன்பு கேங்’ இடையே சலசலப்பை உண்டாக்கி விட்டனர் புது வரவுகள்.
புதிய போட்டியாளர்கள் வந்த மறு நாளிலேயே ஒரு புதிய அறிவிப்பையும் பிக்பாஸ் வெளியிட்டார். அதாவது இனி சூப்பர் டீலக்ஸ் சலுகை இல்லை. அனைவரும் பிக்பாஸ் வீடுதான். இதை முதல் நாளிலேயே செய்திருக்க வேண்டும். காரணம், இப்படி பிரித்து வைப்பதால் போட்டியாளர்களுக்குள் கடுமையான போட்டி மனப்பான்மை உண்டாகும் என்று நினைத்திருப்பார்கள் போலும். ஆனால் நடந்தது என்னவோ, சூப்பர் டீலக்ஸ் வீட்டில் சாப்பிட்டு விட்டு, தூங்குவது மட்டும்தான்.
வைல்டு கார்ட் போட்டியாளர்களைப் பற்றி பிக்பாஸ் கருத்து கேட்டபோது தேக்கி வைத்த வன்மத்தை எல்லாம் ஒரேடியாக கொட்டித் தீர்த்து விட்டார் பார்வதி. பார்வதி vs பிக்பாஸ் வீடு என்று சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி இனி வரும் நாட்களில் பார்வதி vs வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்று மாறினாலும் ஆச்சர்ய்படுவதற்கில்லை.
இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம் கூட வைல்ட் கார்ட் வழியே வந்தவர்கள் முதல் நாளில் ஓவர் சீன் போட்டு அடுத்தடுத்த நாட்களிலேயே கூட்டத்தில் கரைந்து போன சம்பவம் எல்லாம் உண்டு. அர்ச்சனா போல கோப்பையை வென்றவர்களும் உண்டு. இவர்கள் நால்வரில் ஜொலிக்கப் போவது யார்? கூட்டத்தில் கோவிந்தா போடப் போவது யார் என்பது வரக்கூடிய நாட்களில் தெரிந்து விடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT