Published : 03 Nov 2025 04:18 PM
Last Updated : 03 Nov 2025 04:18 PM
அப்போது காலையில் இருந்து மாலை வரை டப்பிங் பேசினால் நூறு ரூபாய் கிடைக்கும். கும்பல், சண்டை போன்ற காட்சிகளில் நாங்களும் கத்த வேண்டும். இதனால் தொண்டைப் புண்ணாகிவிடும். அப்படி இருக்கும் போது யாராவது இரவு ஒன்பது மணி வரை டப்பிங் போகும் என்று சொன்னால், வலியையும் மீறி சந்தோஷம் வரும். ஏனென்றால் ஐம்பது ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும்.
அந்த காலகட்டத்தில் ‘மாயாவி மாரீசன்’ தொடரில் மாயாவியாக நடித்த காளிதாஸ் என் நண்பர். நான் அவரை மாமா என்றழைப்பேன். ரெமி ஜீயெஸ் என்பவர் மயிலாப்பூரில் டப்பிங் ஸ்டூடியோ வைத்திருந்தார். அவர் ‘ஜீசஸ் ஆஃப் நாசரேத்’ என்ற ஆங்கில டெலிபிலிமை தமிழ்ப்படுத்தினார்.
அதில், இயேசுநாதருக்கு ரெமி ஜீயெஸ் பேசுவார். நாங்கள் வழக்கம் போல ஏதோ வருகிற, போகிற கதாபாத்திரங்களுக்குப் பேசுவோம். அப்போது பேசுவதற்காக, எனக்கும் காளிதாஸுக்கும் ஒரு வசனம் வந்தது. இயேசுநாதரை பிடித்துச் செல்வதற்காக குதிரையில் வீரர்கள் வந்திருக்கிறார்கள் என்பது காட்சி. நான், “இவர்கள் ரோமை மன்னரின் வீரர்கள்” என்று சொல்வேன்.
காளிதாஸ், “தீர்க்கதரிசியை பிடித்துச் செல்வதற்காக வந்திருக்கிறார்கள்” என்பார். உடனே ரெமி ஜீயெஸ், “காட்சியில் பேசுகிறவர்கள் படிப்பறி வில்லாதவர்கள் மாதிரி தெரிகிறது. அதனால் இவ்வளவு உரைநடையாக வேண்டாம். பேச்சுவழக்கை பயன்படுத்தலாம்” என்றார். உடனே நான், “மானிட்டர் பார்க்கலாம்” என்றேன். காளிதாஸ் என்னை முறைத்துவிட்டு, “என்னடா சிங்கிள் வசனத்துக்கு மானிட்டர் பார்க்கணுங்கற, உனக்கு திறமையில்லையா?” என்றான்.
பிறகு நேரடியாக டேக்குக்கு போகலாம் என்றான். பட்டன் அழுத்தியதும் பேச ஆரம்பித்தோம். “இவங்கள்லாம் ரோமை மன்னரோட வீரங்க” என்று நான் சொன்னேன். உடனே காளிதாஸ், “தீர்க்கதரிசியை புட்ச்சுனு போவ வந்திருக்காங்கோ’ என்றதும் நான் “நிறுத்து” என்று சொன்னேன். “ஏன்?” என்றான். “பேச்சுவழக்குல மாத்துன்னு சொன்னா, ஜீசஸை மந்தைவெளிக்கே கூட்டுட்டு வந்துட்டே?” என்றேன். ரெமி ஜீயெஸ், எங்கே என்று பார்த்தால், அவர் அப்படியே டேபிளில் படுத்து சிரித்துக் கொண்டிருந்தார்.
ஆருர்தாஸ் ஐயாதான் எனக்கு டப்பிங்கில் குரு என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். டப்பிங் என்றால் என்ன என்று அவரிடம்தான் கற்றுக் கொண்டேன். அப்போது தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அங்குசம்’ ‘இதுதான்டா போலீஸ்’, என்ற பெயரில் தமிழில் டப்பிங் பண்ணுவதற்காக வந்திருந்தது. டாக்டர் ராஜசேகர், ஜீவிதா, ராமி ரெட்டி என பலர் நடித்திருந்தார்கள். சுரேஷ் மஹாலில் டப்பிங். அந்தப் படத்தில் வெவ்வேறு குரல்களில், பல கதாபாத்திரங்களுக்கு நான் பேசியிருக்கிறேன்.
ஒன்று பேசி முடித்ததும் அடுத்த கதாபாத்திரத்துக்குப் பேச முன்னால் போய் நிற்பேன். “டேய் இப்பத்தான பேசினே. மறுபடியும் ஏன் அடுத்ததுக்குப் போய் நிற்கிற? இவன் ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு” என்று சிரித்துக் கொண்டே கடிந்துகொள்வது போல பாராட்டுவார் ஆரூர்தாஸ் ஐயா. அவரிடம் நான் ஒரு உதவி இயக்குநர் போல வேலை பார்த்தேன் என்று சொல்லியிருக்கிறேன் இல்லையா? அந்தப் படத்தில் ஒரு முதலமைச்சர் கதாபாத்திரம் வரும். அதில் தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான எம்.எஸ். ரெட்டி நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரத்துக்கு ஆரூர்தாஸ் ஐயா டப்பிங் பேசியிருந்தார். அந்த ரீலை போட்டு பார்த்தோம்! முதல்வர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்பார்கள். ஒரு நிருபர், “பத்திரிகை நிருபர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்காங்க... இதுக்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க?” என்று கேட்பார்.
அதற்கு முதல்வர், “முதல்ல, மாணவர்களோட உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த வைக்கணும். அதுக்கப்புறம்தான் மீதி எல்லாம்” என்று சொல்வார். இதை பார்த்து விட்டு ஆரூர்தாஸ் ஐயாவை எல்லோரும் பாராட்டினார்கள். நான் ஒரு ஓரமாக எதுவும் சொல்லாமல் நின்றேன். “என்னடா நீ ஒண்ணும் சொல்லலையே” என்றார். “நல்லாருக்கு. ஒரே ஒரு இடத்துல மட்டும் கொஞ்சம் இலக்கணப் பிழை இருக்கு” என்று சொன்னேன். உடனே சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் என்னைப் பிடித்துக் காய்ச்சி எடுத்துவிட்டார்கள். “கிராமர் மிஸ்டேக்கா? நீ யார்ட்ட பேசற தெரியுமா? அவர் எழுதி, பேசினதிலேயே தப்பு கண்டுபிடிச்சிட்டியா, நீ?” என்று சத்தமாகக் கேட்டார்கள்.
“அவர் என் குருநாதர்தான். ஆனா, என் குருநாதர் பேசியிருப்பதில் அறிந்தோ அறியாமலோ சிறு பிழை வந்திருக்கும்போது அதைப் பொறுத்துக் கொண்டிருந்தால், ஐயா கற்றுக் கொடுக்கிற இந்த வித்தைக்கு அர்த்தம் இல்லை” என்று சொன்னேன். திரும்பவும் அவர்கள் சத்தம் போட்டார்கள். பிறகு ஆரூர்தாஸ் ஐயா, “எந்த இடத்துல பிழையை கண்டுபிடிச்ச, சொல்லு?” என்றார். நான், “முதல்வர் விமான நிலையத்துல இருந்து வரும் போது நிருபர்கள் கேள்வி கேட்கிறாங்கள்ல அந்த இடத்தைப் பாருங்க” என்றேன்.
படத்தைப் போட்டார்கள். போட்டதும், ஒரு இடத்தில் நிறுத்தச் சொல்லிவிட்டு அந்த இடத்தில் வசனம் சரியில்லை என்றேன். “என்ன சரியில்லை?” என்றார். அதாவது ‘முதல்ல மாணவர்களோட உண்ணாவிரதப் போராட்டத்தை’ அப்படின்னா, அடுத்து நிறுத்தணும்னு வரணும். இல்லைனா, ‘முதல்ல, மாணவர்களை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த வைக்கணும்’னு வரணும். ஆனா நீங்க, ‘முதல்ல, மாணவர்களோட உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த வைக்கணும்’னு பேசியிருக்கீங்கன்னு சொன்னேன். அப்படியே உட்கார்ந்திருந்தவர் எழுந்து என் கன்னத்தைப் பிடித்தார். “யார்ரா நீ?” என்றார். “உங்க சிஷ்யன்” என்றேன். “இதை சரின்னு சொல்லியிருந்தீங்கன்னா, என் குருநாதர் இப்படியொரு தப்பைப் பண்ணியிருக்காருன்னு என் இறுதிநாள் வரை வருத்தப்படுவேன்” என்றேன். அதற்குப் பிறகு, என்னை வசைபாடியவர்கள், நீ சொன்னது சரிதான் என்றார்கள்.
(திங்கள் தோறும் பேசுவோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT