Published : 02 Nov 2025 12:26 PM
Last Updated : 02 Nov 2025 12:26 PM
ஆனந்தராஜ், ‘பிக்பாஸ்’ சம்யுக்தா, முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு, ஷகிலா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம், ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரித்துள்ள இப்படத்தை ஏ.எஸ்.முகுந்தன் இயக்கியுள்ளார்.
ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். காந்த் தேவா இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆனந்தராஜ் பேசியதாவது:
எனக்குக் கிடைத்த எல்லா இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள் தான், அவர்களால் தான் நான் இந்த அளவு வளர்ந்துள்ளேன். நானும் ஆர்.கே.செல்வமணியும் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது என்னை யாருக்கும் பிடிக்காது, அப்போதே ரவுடித்தனம் பண்ண ஆரம்பித்ததுதான் காரணம். தயாரிப்பாளர் அண்ணாதுரை முதலில், இந்தக் கதையைச் சொல்ல வந்த போது, நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டதால் கதை கேட்க ஒப்புக்கொண்டேன்.
‘எனக்கு சம்பளம் தந்துவிடுவீர்கள், டெக்னீஷின்களுக்கும் சரியாகத் தந்துவிடுவீர்களா?’ என கேட்டேன், அதை சரியாக செய்துவிட்டார். என்னால் பயந்து நடிக்கவும் முடியும், பயமுறுத்தவும் முடியும். அந்த திறமை உள்ளது. பணம் மட்டும் முக்கியமில்லை, பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், பணம் நிறைய வந்துவிட்டால் அது முக்கியமாகிவிடும், மகிழ்ச்சி போய்விடும். நான் நானாக வந்தவன் தான்.
என்னைப் பல பேர் முதுகில் குத்தியுள்ளார்கள், அதையெல்லாம் தாண்டித்தான் வந்துள்ளேன். ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' குறித்த நேரத்தில் முடிய காரணம் இயக்குநர் தான். அவருக்கு நன்றி. இதில் கதை நாயகனாக நடித்துள்ளேன். இவ்வாறு ஆனந்தராஜ் கூறினார்.
படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT