Published : 02 Nov 2025 12:09 PM
Last Updated : 02 Nov 2025 12:09 PM

அன்பை வெளிப்படுத்த உயிரை பணயம் வைப்பதா? - கரூர் சம்பவம் குறித்து அஜித் குமார் கருத்து

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே வெளிநாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் கலந்துகொண்ட அவர், அடுத்து நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார்.

இதற்கிடையே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்தும் அஜித்குமார் பேசி உள்ளார்.

அவர் கூறும்போது, “அந்த சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஊடகங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.

கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. அதனால் ஒட்டுமொத்த திரைத்துறையும் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது. எங்களுக்கு அதில் விருப்பமில்லை.

ரசிகர்களின் அன்பு எங்களுக்குத் தேவைதான். அதற்காகக் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்த உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது” என்றார். அடுத்த படம் பற்றிய கேள்விக்கு, ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x