Published : 01 Nov 2025 11:11 AM
Last Updated : 01 Nov 2025 11:11 AM
தமிழ் சினிமாவின் ஆரம்பக்கட்டத்தில் புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றைப் படமாக்க இயக்குநர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். ஒரே கதையை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தயாரிப்பாளர்கள் படமாக்கியதும் நடந்திருக்கிறது. பதிப்புரிமை இல்லாததால் ஒரே கதையை இரண்டு தயாரிப்பாளர்கள் தயாரித்து, அதை ஒரே நேரத்தில் வெளியிடப் போட்டியும் நடைபெற்றிருக்கிறது. அப்படி போட்டியில் உருவான படங்களில் ஒன்று, ‘பில்ஹணா’. காஷ்மீர் கவிஞரான இவர் கதையை கொண்டு ஒரே நேரத்தில் 2 படங்கள் தமிழில் உருவாகின.
அக்காலகட்ட பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ், எம்.கே. தியாகராஜ பாகவதரை ஹீரோவாக்கி, ‘பில்ஹணன்’ கதையைப் படமாக்க இருப்பதாக விளம்பரம் வெளியிட்டது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைது செய்யப்பட்டதால் அந்தப் படம் டிராப் ஆனது.
இதையடுத்து எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஏ.எஸ்.ஏ சாமி, பில்ஹணனின் கதையை நாடகமாக்கி இருந்தார். அதை வாங்கி, டி.கே.எஸ்.சகோதரர்கள் மேடை நாடகமாக நடத்தினர். அது வெற்றி பெற்றதும், ‘பில்ஹணன்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்தனர்.
இதில், டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, எம்.எஸ்.திரவுபதி, டி.கே.சிவதாணு, ‘ஃபிரெண்ட்’ ராமசாமி உட்பட பலர் நடித்தனர். கே.வி.சீனிவாசன் இயக்கினார். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 1948-ம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகி சராசரி வெற்றியைப் பெற்றது.
இதற்கிடையே முபாரக் பிக்சர்ஸ் என்ற நிறுவனமும் ‘பில்ஹணன்’ கதையை சினிமாவாக தயாரித்தது. ‘பில்ஹணா அல்லது கவியின் காதல்’ என்ற தலைப்பில் உருவான இப்படத்தில் கவிஞராக கே.ஆர்.ராமசாமியும் அன்றைய பிரபல நடனக் கலைஞர் ஏ.ஆர்.சகுந்தலா, இளவரசி யாமினியாகவும் நடித்தனர்.
மன்னர் ஒருவர் தனது மகளுக்கு கல்வி கற்பிப்பதற்காகக் கவிஞர் பில்ஹணனை நியமிக்கிறார். மகள் பேரழகி என்பதால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து விடக்கூடாது என்பதற்காக, பில்ஹணன் பார்வை குறைபாடுள்ளவர் என்று யாமினியிடம் பொய் சொல்கிறார்.
அதே போல, யாமினி அழகில்லாதவள் என்று பில்ஹணனிடம் சொல்கிறார். இருவருக்கும் இடையில் திரை இருக்கிறது. ஒரு நாள் பாடம் நடந்து கொண்டிருக்கும்போது, மேகமற்ற வானத்தில் முழு நிலவு வருகிறது. அதைப் பார்த்து சிலிர்க்கும் கவிஞருக்கு கவிதை பொங்குகிறது. அதை வர்ணித்துப் பாடுகிறார்.
பார்வையற்ற ஒருவரால் எப்படி நிலவை இப்படி வர்ணித்துப் பாட முடியும் என்று ஆச்சரியம் வருகிறது. திரைச்சீலையை விலக்குகிறார். பில்ஹணன் அழகான இளைஞன் என்பதைக் காண்கிறாள், அதே நேரத்தில், யாமினி பேரழகி என்பதை பில்ஹணன் பார்க்கிறார். தேடி வந்து ஒட்டிக் கொள்கிறது காதல். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர்.
விஷயம் அறியும் மன்னருக்கு வழக்கம் போல கோபம் கொப்பளிக்க அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறார். ஆனால் மக்களும் மன்னரின் நண்பர்களும் அவருடைய முடிவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள், இறுதியாக அவர், காதலுக்குச் சம்மதிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது கதை.
ஜி.சகுந்தலா, ஆர்.பாலசரஸ்வதி தேவி, புளிமூட்டை ராமசாமி, எம்.ஜெயஸ்ரீ, எம்.ஜெயா, அங்கமுத்து என பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்தனர். இதன் வசனத்தை எஸ்.சுந்தராச்சாரியார் எழுதினார். பாபநாசம் சிவன் இசையமைத்தார். பி.என்.ராவ் இயக்கினார். இவர், ரம்பையின் காதல், பூலோக ரம்பை, குமாஸ்தாவின் பெண், மதனகாமராஜன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர். ஜெமினியின் பிரமாண்டமான படைப்பான ‘சந்திரலேகா’வின் திரைக்கதையிலும் பணியாற்றியவர்.
டி.கே.எஸ். சகோதரர்களின் ‘பில்ஹணன்’ முதலில் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றதால், 1948-ம் ஆண்டு இதே தேதியில் (நவ.1-ல்)வெளியான இந்த பில்ஹணா சரியான வெற்றியை பெறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT