Published : 28 Oct 2025 08:53 PM
Last Updated : 28 Oct 2025 08:53 PM
பேய் கதை நம்மை எப்போதும் கைவிடாது என்று இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும் போது குறிப்பிட்டார். மனோன்மணி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’. ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மாரி, அபர்ணா, விமலா, ஆனந்த், இலக்கியா, இம்ரான், சசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெங்கடேஷ் மாவேரிக், இசையமைப்பாளராக காயத்ரி குருநாத் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.
இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, கேபிள் சங்கர், இசையமைப்பாளர் தாஜ்நூர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும் போது, “புதியவர்களை அறிமுகப்படுத்துவது தான் இன்றைய சூழலில் சிரமமாக இருக்கிறது. முன்பு பெரிய இயக்குநர்கள் அவர்களை அறிமுகப்படுத்துவார்கள். இன்று அவர்களே பெரிய ஹீரோக்களை தேடிப் போகிறார்கள்.
இந்த படம் ஹாரர் பாணியில் உருவாகியுள்ளது என்பது தெரிகிறது. பேய் கதை நம்மை எப்போதும் கைவிடாது, பேயை நம்பினால் சினிமாவில் அவன் எப்போதும் சம்பாதிப்பான் என்று இயக்குநர் சுந்தர் சி சொல்வார். மனிதன் எதை எதிரியாக நினைக்கிறானோ அதை விரும்ப ஆரம்பிக்கிறான் என்றால் அவன் நமக்கு அடிமை. பயத்தை நாம் விரும்புகிறோம், பயத்தை விரும்பும் வரை பேய் படங்களுக்கு வரவேற்பு இருக்கும். பெரும்பாலும் பெண்கள்தான் பேயாக இருக்கிறார்கள். பெண்களை நாம் சாமியாக பார்ப்பதால் அவர்களையே பேயாகவும் பார்க்கிறோம்.
முதல் படத்தின் ஆடியோ ரிலீஸின் போதே இரண்டாவது படத்திற்கு பூஜை போடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை நீங்கள் செய்து இருக்கிறீர்கள். எம்ஜிஆர் காலத்தில் அவரது ரசிகர்கள் தங்களது ரத்தத்தை விற்று அவரது படங்களை பார்த்தார்கள். அதுதான் சினிமா. அப்படிப்பட்ட சினிமாவிற்குள் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நல்ல சிறப்பான படங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்” என்று பேசினார் சுப்பிரமணிய சிவா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT