Published : 27 Oct 2025 12:48 PM
Last Updated : 27 Oct 2025 12:48 PM
நாங்கள் சென்னைக்கு வந்தது 1972-ம் வருடம். லாயிட்ஸ் சாலையில் பைசன் கம்பெனிக்கு அருகில் டி.கே.சண்முகம் அண்ணாச்சி, டி.கே.பகவதி அண்ணாச்சி வீடு இருந்தது. அருகிலேயே அப்பாவின் நண்பர் கருடலிங்கத்தின் வீடும் இருந்தது. அவர் வீட்டில்தான் தங்கினோம். அங்கிருந்துதான் சென்னை வாழ்க்கைத் தொடங்கியது.
1978-ம் ஆண்டு நானும் அக்காவும் ‘சிட்டுக்குருவி’ படத்துக்கு முதலில் டப்பிங் பேசினோம் என்று கூறியிருந்தேன். பிறகு அக்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு அப்போது 21 வயது. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் என் சினிமா முயற்சியை விடவில்லை. ஏனென்றால் அது என் பேராசை. தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் பிரபல வசனகர்த்தா ஆருர்தாஸ் ஐயாவின் டப்பிங் யூனிட்டில் வாய்ப்புக் கிடைத்தது. ‘டப்பிங் என்றால் என்ன?’ என்று எனக்கு உணர்த்தியவர் அவர். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள், இரவில் டப்பிங் படங்கள் என்று ஓயாமல், 24 மணி நேரம் போதாமல் அவர் உழைத்துக் கொண்டிருந்தார்.
அவர்களின் டப்பிங்கில் மம்மூட்டியும் ரஹ்மானும் நடித்த ‘கூடெவிடே’ என்ற மலையாள படத்தில் பேச ஆரம்பித்தேன். இதுதான் நடிகர் ரஹ்மானுக்கு முதல் படம். அப்போது, “டேய் நல்லா பேசற. வேலையை கத்துக்கோ. நல்லா முன்னுக்கு வருவே” என்று சொன்னார் ஆருர்தாஸ் ஐயா. அது அவருடைய ஆசிர்வாதம் போலவே இருந்தது.
அவர்கள் மாதத்துக்கு இரண்டு படம் டப் பண்ணுவார்கள். கம்ப்யூட்டர் வராத அந்த காலகட்டத்தில் டப்பிங் பேசுவதற்கென்று சிலர் இருந்தார்கள். அவர்களுடன் பழகினேன். அவர்கள் என் பணிவைப் பார்த்து, என் பேச்சைப் பார்த்து அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்கள். என் அக்கா ஹேமமாலினி, அப்போது பெரிய டப்பிங் கலைஞராக இருந்தார்.
அவரின் தம்பி என்பதால் எனக்கும் மதிப்பு கிடைத்தது. ஆனால், “டேய், என் தம்பிக்கு வாய்ப்புக் கொடுங்கன்னு நான் போய் கேட்க மாட்டேன், நீயா உழைச்சு முன்னேறு” என்று சொல்லிவிட்டார். ஆரூர்தாஸ் ஐயாவின் டப்பிங் வேலைகள் காலையில் 7 மணிக்குத் தொடங்கி இரவு 2 மணி வரை போகும்.
தி.நகர் போக் சாலையில் ஆனந்த் ஹவுஸ் என்ற டப்பிங் தியேட்டர் இருந்தது. அங்குதான் பேசுவோம். அப்போது சின்னபோரூரில் வசித்து வந்தேன். சைக்கிள் கூட கிடையாது. பேருந்தில் செல்வேன். இரவு 2 மணிக்கு மேல் பேருந்து சர்வீஸ் கிடையாது! நான் நடந்தே வீட்டுக்குச் செல்வேன். அப்போது போலீஸார் நிறுத்தி விசாரிப்பார்கள். என்னையும் யூனிபார்மில் இல்லாத போலீஸ்காரர் ஒருமுறை விசாரித்தார்.
‘நில்லு, யார் நீ?’ என்றார். ‘மனிதன்’ என்றேன். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘உன்னைப் பார்த்தா சந்தேகமாக இருக்கு, ஸ்டேஷனுக்கு வா’ என்றார். சரி என்று சொல்லி விட்டு அங்கு வந்ததும் ஜேப்பியார் அண்ணனுக்கு ஃபோன் பண்ணிக்கொள்கிறேன் என்றேன். அவர் அப்போது ‘வசந்த அழைப்புகள்’ போன்ற படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
அவர் படத்தில்தான் டப்பிங் பேசி விட்டு வந்து கொண்டிருந்தேன். பிறகு என்ன நினைத்தாரோ, “சரி, சரி போங்க” என்று அனுப்பி வைத்தார். அந்த இடத்தில் எனக்கு ஜேப்பியார் அண்ணனின் பெயர் உதவியது. பிறகு வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு அம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசுவேன். காபி குடித்து விட்டு முதுகில் மாட்டிக் கொள்ளும் பேக்கில் ஒரு சட்டையும் பேன்ட்டும் எடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தால், முதல் பேருந்து 5.15 மணிக்கு வரும்.
அதில் ஏறி, வள்ளுவர் கோட்டம் ஸ்டாப்பில் இறங்குவேன். அங்கிருந்து நடிகர் சங்கம் இருக்கும் அபிபுல்லா சாலை வழியாக ஓடி நேராக ஆனந்த் ஹவுஸ் போவேன். அங்கு டப்பிங் பணி, 15 நாள்கள் நடக்கும் என்பதால் குளியலறையில், உடலுக்கும் துணிக்கும் என தனித்தனி சோப்புகளை வைத் திருப்பேன். துணிகளைத் துவைத்து அங்கேயே காயப் போட்டு, குளித்துவிட்டுத் தயாராக இருப்பேன்.
ஆருர்தாஸ் ஐயா, காலை 6.45 மணிக்கு வருவார். “எப்படி அதுக்குள்ள வந்தே?” என்றெல்லாம் கேட்கமாட்டார். “மத்தவங்க வரலையா?” என்பார். “வந்துருவாங்கய்யா” என்பேன். பிறகு 7 மணிக்கு வேலை தொடங்கும். அது ‘லூப்’ சிஸ்டம். பகல் முழுவதும் அப்படியே நின்று வார்த்தைகள் சரியாக ‘சிங்க்’ ஆகியிருக்கிறதா? என்று நான் பார்ப்பேன். சில நேரம் மெதுவாக, “ஐயா, அந்த இடத்துல இந்த வார்த்தையை போடலாமா?” என்று ஆலோசனை கேட்பேன். ஏறக்குறைய அவரிடம் உதவியாளர் போல வேலை செய்தேன்.
அந்த நேரத்தில், பாடலாசிரியர் மருதகாசி ஐயாவின் மகன் மருதபரணியின் யூனிட்டிலும் இணைந்தேன். பிறகு தேவநாராயணன், சமீபத்தில் மரணமடைந்த எம்.ஏ.பிரகாஷ், வைரமுத்து, அவரிடம் அசிஸ்டென்டாக இருந்த ராஜேந்திரன், ஆகியோர் யூனிட்டிலும் பேச ஆரம்பித்தேன். பிறகு, தூர்தர்ஷனில் சீரியல்கள் வந்ததும் பிசியாகிவிட்டேன். அப்போது ஸ்கூட்டர் வாங்கியிருந்தேன். ஒருமுறை, தொடர்ந்து 96 மணி நேரம் தூங்காமல் டப்பிங் பேசியிருக்கிறேன்.
அப்படி பேசிவிட்டு ஸ்கூட்டரில் போகும் போது தூக்கம் கண்ணை இழுக்க எதிரில் பார்க்கும் பொருள் எல்லாம் சுற்றுவது போல இருந்தது. என்னால் என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு வீட்டுக்கு எப்படிப் போனேன் என்று தெரியவில்லை. அதை இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
( திங்கள்தோறும் பேசுவோம் )
முந்தைய அத்தியாயம்: விளையாட்டுப் போட்டியும் ஆண்டு விழாவும்... ‘பட்டாபி எனும் நான்’ - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 3
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT