Published : 26 Oct 2025 09:38 PM
Last Updated : 26 Oct 2025 09:38 PM
‘கபாலி’ பட வெளியீட்டுக்கு முன்பே 100 கோடி லாபம் ஈட்டியதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘பைசன்’. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.
இந்த விழாவில் பா.ரஞ்சித் பேசும் போது, படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி பேசினார். பின்பு தன் மீதான விமர்சனங்களூக்கு பதிலளித்தார். அப்போது குறிப்பிடுகையில், “என் மீது விமர்சனங்கள் வரும்போது, ரஜினியை வைத்து எப்படி நீ இப்படி எடுக்கலாம்? அவரை எப்படி இந்த வசனத்தை பேச வைக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். அந்த சமயத்தில் என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. ’மெட்ராஸ்’ படத்தை கொண்டாடியது மாதிரி ‘கபாலி’ படத்தையும் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். அப்படத்தின் வெற்றி என்ன என்பது தயாரிப்பாளர் தாணுவிற்கு தெரியும்.
பட வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம் ஈட்டிய படம் ‘கபாலி’. வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம். பல படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்று கொண்டாடப்பட்டுள்ளது. விமர்சன ரீதியாக கொண்டாடப்படவில்லை. படத்தின் திரைக்கதை குறைபாடுகளை மனரீதியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், ரஜினியை எப்படி இந்த வசனத்தை பேச வைக்கலாம் என்ற கேள்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் நடித்த இதர படங்கள் அனைத்துமே சூப்பரா என்று தெரியவில்லை. ‘கபாலி’ நல்ல படம், நன்றாக இயக்கியிருந்தேன் என்று ரஜினி சார் நம்பினார். அந்தப் படம் வெற்றி படம் என்று நம்பி மீண்டும் எனக்கு ‘காலா’ வாய்ப்பு கொடுத்தார்.
இந்த சமூகம் கடுமையாக விமர்சித்த பிறகும் அவரை வைத்து நான் ஏன் ‘காலா’ என்ற படத்தை இயக்கினேன் என பலரும் நினைக்கலாம். அந்தப் படத்தை பெரிய கமர்ஷியல் படமாக இயக்கி பணம் சம்பாதித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால், நிலமற்ற மக்களுக்கு நிலம் கோருதல் விஷயத்தை பேச முயற்சி செய்தேன்” என்று பேசினார் இயக்குநர் பா.ரஞ்சித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT