Published : 25 Oct 2025 11:31 AM
Last Updated : 25 Oct 2025 11:31 AM

‘தேசிய தலைவர்’ படத்தில் சர்ச்சை கருத்துகள் நீக்கம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு குறித்த ‘தேசிய தலைவர்’ படத்திலிருந்து சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகள் நீக்கப்பட் டுள்ளன என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பரமக்குடியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘தேசிய தலைவர்’ என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பஷிர் நடித்துள்ளார். ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். இதில் சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் சில வசனங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கடி சாதி மோதல்கள் நடக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய வசனங்களுடன் படத்தை வெளியிடுவது மீண்டும் மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும்.

எனவே இந்த படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடாது, வழங்கியிருந்தால் அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் வந்தது. மனுதாரர் தரப்பில், ‘தேசிய தலைவர்’ படம் அக். 30-ல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தணிக்கைச் சான்று வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட அனுமதிக்கலாம் என வாதிடப்பட்டது.

மத்திய அரசு சார்பில், தணிக்கைக் குழு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினர். காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்.28-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x