Published : 24 Oct 2025 08:19 AM
Last Updated : 24 Oct 2025 08:19 AM
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களான சபேஷ் - முரளி கூட்டணியின் அங்கமான சபேஷ் உடல்நலக் குறைவால் அக்டோபர் 24-ம் தேதி காலமானார். அவருக்கு வயது 68.
இசையமைப்பாளர் தேவாவின் இரட்டைச் சகோதர்கள்தான் சபேஷ் - முரளி. 1983-ஆம் ஆண்டில் கீபோர்டு பிளேயராக தனது இசைப் பயணத்தை தொடங்கிய சபேஷ், தன் அண்ணன் தேவா மட்டுமின்றி கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியுள்ளார்.
89-ல் தேவா திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பே அவர் கஷ்டப்பட்ட காலம் தொட்டு அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சபேஷ் - முரளி. குறிப்பாக தேவா இசையமைத்த பல படங்களில் பின்னணி இசை தன்னுடையது என்று பல பேட்டிகளில் சபேஷ் குறிப்பிட்டுள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ ஆகிய படங்களுக்கு பின்னணி இசை அமைத்தது மட்டுமின்றி, தற்போது வரை ரஜினி படங்களில் வரும் இன்ட்ரோ டைட்டில் இசை, இவர் இசையமைத்தது தான்.
தேவா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஆண்டுக்கு 23 படங்கள் வரை வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அப்போதெல்லாம் இரவு பகல் பாராமல் சபேஷ் - முரளி இசைக் கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமின்றி தேவா இசையில் வெளியான பல ஹிட் பாடல்களை சபேஷ் பாடியுள்ளார்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றும் மிக பிரபலமாக இருக்கும் ‘உதயம் தியேட்டருல’, ‘கந்தன் இருக்குமிடம் கந்தகோட்டம்’, ‘கொத்தால்சாவடி லேடி’, ‘அண்ணாநகரு ஆண்டாளு’, ‘குன்றத்துல கோயிலு கட்டி’ போன்ற பல கானா பாடல்களை பாடியுள்ளார் சபேஷ்.
கானா பாடல்கள் என்றாலே இந்தப் பாடல்கள் தான் நினைவுக்கு வரும் அளவுக்கு இவை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக இருந்தன. 2000-ன் தொடக்கத்தில் ’நினைவிருக்கும் வரை’ படத்தில் சபேஷ் குரலில் இடம்பெற்ற ‘காத்தடிக்குது காத்தடிக்குது’ பாடல் ஒலிக்காத ஸ்பீக்கர்களே இல்லை எனலாம்.
சபேஷ் - முரளி இருவரும் இசையமைப்பாளர்களாக அறிமுகம் ஆனது சரத்குமார் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளியான ‘சமுத்திரம்’ படத்தில். இந்த படத்தில் இடம்பெற்ற ‘அழகான சின்ன தேவதை’, ‘பைனாப்பிள் வண்ணத்தோடு’ பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகின. படத்தின் பிண்ணனி இசையும் பாராட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘பொக்கிஷம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கோரிப்பாளையம்’, ‘கூடல்நகர்’ என பல படங்களுக்கு இசையமைத்தது.
‘தவமாய் தவமிருந்து’ படத்தில் தீபாவளி தினத்துக்கு முந்தைய இரவு தூங்காமல் காத்திருக்கும் தன் மகன்களுக்காக இரவு முழுக்க பணத்துக்காக படாதபாடு படுவார் ராஜ்கிரண். அந்தக் காட்சியின் சோகம் பின்னணி இசை மூலம் மூலம் பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் கடத்தப்பட்டிருக்கும். ராஜ்கிரண் தன் மகன்களுக்காக பாடும் ‘ஒரே ஒரு ஊருக்குள்ளே’ பாடல் ஒரு தந்தையின் பாசப் போராட்டத்தை கண்முன் கொண்டுவரும்.
அதேபோல், வடிவேலுவின் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் வெற்றிக்கு அதன் பின்னணி இசையும், பாடல்களும் முக்கியப் பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது.
இது தவிர இவர்கள் இருவரும் பிற இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் பின்னணி இசை அமைத்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ‘ஜோடி’ படத்துக்கு பின்னணி இசை அமைத்தது சபேஷ் - முரளிதான். பரத்வாஜ் இசையமைத்த ‘ஆட்டோகிராஃப்’, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை மட்டும் அமைத்துள்ளனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இசையுலகிற்கு சிறப்பான முறையில் பங்களித்து வந்த சபேஷ் மறைவு, தேவா குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரை இசை ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT