Published : 23 Oct 2025 10:31 PM
Last Updated : 23 Oct 2025 10:31 PM
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.
இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளரும், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான எம்.சி. சபேஷ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று மதியம் காலமானார்.
தனது இரட்டை சகோதரரான முரளி உடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் பல்வேறு திரைப்படங்களுக்கு சபேஷ் இசையமைத்து வந்தார். சபேஷுக்கு கீதா மற்றும் அர்ச்சனா எனும் மகள்களும் கார்த்திக் எனும் மகனும் உள்ளனர். சபேஷின் மனைவி தாரா முன்னரே காலமாகி விட்டார்.
சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா. அழகப்பன், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு சபேஷ் - முரளி இசையமைத்துள்ளனர். இதுதவிர தேவா இசையமைத்த ஏராளமான கானா பாடல்களையும் சபேஷ் பாடியுள்ளார். ’கொத்தால்சாவடி லேடி’, ‘உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, தவமாய் தவமிருந்து படத்தில் இடம்பெற்ற ‘ஒரே ஒரு ஊருக்குள்ளே’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை சபேஷ் பாடியுள்ளார்.
சபேஷ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாடலாசியர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தேனிசைத் தென்றல் தேவாவின் இளவல் இசையமைப்பாளர் சபேஷ் மறைவு மனவலியைத் தருகிறது. கலையன்றி வேறொன்றும் அறியாத இசையே வாழ்வென்று வாழ்ந்த ஒரு சகோதரர் சபேஷ். அமைதியானவர்; அவர் பேசியதைவிட வாசித்ததே அதிகம்.
அவரது மறைவு தேவா குடும்பத்தார்க்கு மட்டுமல்ல வாசிக்கப்படும் இசைக்கருவிகளுக்கெல்லாம் இழப்பாகும். ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன் அடங்கிவிட்டான். அவரது ஆருயிர் அமைதி பெறட்டும். ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT