Published : 23 Oct 2025 07:44 AM
Last Updated : 23 Oct 2025 07:44 AM
மனித உறவுகளின் ஆழமானச் சிக்கல்களையும் சமூகப் பிரச்சினைகளையும் தனது படங்களின் மூலம் தைரியமாகவும் அழுத்தமாகவும் பேசிய கே.பாலசந்தர், இயக்குநராக அறிமுகமான படம், ‘நீர்க்குமிழி’. எம்.ஜி.ஆரின் ‘தெய்வத்தாய்’ படம் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் அறிமுகமான கே.பாலசந்தருக்கு இயக்குநராக இந்த முதல் படம் தந்த வெற்றிதான், அவரை உச்சிக்குக் கொண்டு சென்றது.
‘நீர்க்குமிழி’ நாடகத்தை எழுதிய கே.பாலசந்தரை, தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.கே.வேலன் சந்தித்தார். அவரை கே.பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியது, அவர் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்த வி.குமார். ‘நீர்க்குமிழி’ கதையை கேட்ட அவர், நாடக அரங்கேற்றத்துக்கு முன்பே, சினிமாவாக்கலாம் என்றார். அதோடு படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என்றும் சொன்னார், கே.பி.யிடம். ‘எனக்கு தொழில்நுட்பம் தெரியாது. திரை நுணுக்கங்கள் தெரியாது, பயமாக இருக்கிறது. திரைக்கதை, வசனம் மட்டும் எழுதி தருகிறேன். நீங்களே டைரக் ஷன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் கே.பி.
அவரை அமைதிப்படுத்திய ஏ.கே.வேலன், “டைரக் ஷன் பெரிய விஷயமல்ல. நடிகர், நடிகைகளின் முகப்பாவனைகள் மூலமாக நீங்கள் வெளிக்கொண்டு வரும் மனித உணர்வுகள் மட்டுமே முக்கியம்” என்று அவருக்கு நம்பிக்கைக் கொடுத்து இயக்குநர் ஆக்கினார், ஏ.கே.வேலன்!
பிறகு நாடகம் மேடையேற்றப்பட்டது. நாடகம் வெற்றி பெறாமல் போனால், திரைப் படமாகிற வாய்ப்பு கைநழுவி போய்விடுமோ? என்ற பயம் முதல் நாளில் இருந்தது பாலசந்தருக்கு. ஆனால் நாடகம் ஹிட்.
பிறகு சினிமாவாக்க தொடங்கினார்கள். படத்தைப் பாடல் பதிவுடன் ஆரம்பிக்கலாம் என்று அதற்கான அனைத்தும் ரெடியானது. தயாரிப்பாளர் ஏ.கே.வேலனிடம் தன்னை அறிமுகப்படுத்திய வி.குமாரை, இதில் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் கே.பி. அவர் இசையில் உவமை கவிஞர் சுரதா எழுதிய ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடலைத்தான் முதல் நாளில் பதிவு செய்ய முடிவு செய்தார்கள்.
நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் வந்து நிற்க, முன்பணம் கொடுப்பதாகச் சொல்லியிருந்த ஃபைனான்சியர் வரவில்லை. பாடல் பதிவு கேன்சல்! தொடக்கமே இப்படி ஆனதற்கு, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்று தொடங்கும் பல்லவிதான் காரணம் என்றார்கள் சிலர். ‘நீர்க்குமிழி’ என்ற தலைப்பும் காரணம் என்று அவர் நண்பர்கள் சென்டிமென்ட் பயம் காட்டினார்கள். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. பிறகு படம் ஆரம்பித்து, வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
பாலாஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் (மேஜர் சுந்தரராஜன்) தன்னுடைய மகள் டாக்டர் இந்திராவை (சவுகார் ஜானகி), மருத்துவ ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்ப நினைக்கிறார். ஆனால், அவருக்கு மருத்துவமனையில் ஏழாவது வார்டில் சிகிச்சை பெறும் கால்பந்தாட்ட வீரர் அருண் (வி.கோபாலகிருஷ்ணன்) மீது காதல் இருப்பதால், அமெரிக்கா செல்வதைத் தவிர்க்கிறார்.
இதற்கிடையே, அதே வார்டில் சிகிச்சைப் பெறும் சேது (நாகேஷ்), அந்த மருத்துவமனையில் செல்ல நோயாளி. புற்றுநோயால் வாழ்வை எண்ணிக் கொண்டிருக்கும் அவர், இந்திரா- அருண் காதலுக்கு உதவ நினைக்கிறார். அவர் நினைத்தது நடந்ததா? காதல் என்னவானது என்பது கதை.
நாகேஷ் ஹீரோவாக நடித்தார். தனது உடல் மொழியாலும் ஜாலி எக்ஸ்பிரஷன்களாலும் படத்தை கலகலப்பாகக் கொண்டு செல்லும் அவர், எமோஷனல் காட்சிகளிலும் மிரட்டியிருப்பார். சவுகார் ஜானகி, வி.கோபாலகிருஷ்ணன், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, ஐ.எஸ்.ஆர், எஸ்.என்.லட்சுமி அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வு. நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
வி.குமார் இசையில் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’வும் ‘கன்னி நதியோரம்...’ பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் ஜெயந்தியுடன் நாகேஷ் ஆடும் ‘கன்னி நதியோரம்’ பாடலில் நாகேஷின் நடனம் இப்போது பார்த்தாலும் சிலிர்ப்பான ரசனையை தருகிறது. இந்தப் பாடலை ஆலங்குடி சோமு எழுதினார். பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் நடன இயக்குநராக அறிமுகமான பாடல் இதுதான்.
1965-ம் ஆண்டு இதே நாளில் (அக்.23) தீபாவளிக்கு ரிலீஸ் ஆன இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT