Published : 22 Oct 2025 06:30 PM
Last Updated : 22 Oct 2025 06:30 PM
ஒளிப்பதிவின் ஃபில்டர் யுகம் என்பது திரைப்பட ஒளிப்பதிவின் பரிணாமத்தில் மிகச் சிறப்பான மற்றும் தனித்துவமான ஒரு காலகட்டமாகும். கருப்பு - வெள்ளை திரைப் பருவம், வண்ணத் தொழில்நுட்பத்தின் அறிமுகம், டிஜிட்டல் கேமரா யுகம் இவ்வனைத்திலும் ஃபில்டர்கள், ஒளி மற்றும் நிழல் மொழியை உருவாக்கி, காட்சியின் உணர்ச்சியை வடிவமைக்கும் முக்கிய கருவியாக இருந்தன. ஒவ்வொரு ஃபில்டரும் ஒரு விஷுவல் டோன் (காட்சிக் குறியீடு) மற்றும் உணர்ச்சி தாக்கத்தை உருவாக்குகிறது.
பழைய கருப்பு- வெள்ளை திரைப்பட நாட்களில், குறிப்பாக குளோஸ்-அப் காட்சிகளில், சாஃப்டெக்ஸ் (Softex) ஃபில்டர்கள் மிக முக்கியமான பங்கு வகித்தன. அந்தக் கால பிலிம் மீடியத்துக்கு அதிக ஒளி தேவைப் பட்டதால் ஒளிப்பதிவாளர்கள் வலுவான விளக்குகளை நேரடியாகக் கதாபாத்திரங்களில் செலுத்தி, அதன் தீவிரத்தை மென்மைப்படுத்த சாப்ட் ஃபில்டர்களை பயன்படுத்தினர்.
முக்கியமாகக் காதல் காட்சிகள் அல்லது ஓர் நாயகியின் முகப்பில் உணர்ச்சி நெருக்கத்தை உருவாக்க, இந்த மென்மையான ‘ஹேஸ்’ (Haze - மங்கல்) தோற்றம் பார்வையாளரின் மனதைக் கவர்ந்து, அந்தக் கதாபாத்திரத்துடன் ஒரு ‘தனிப்பட்ட தொடர்பு’ ஏற்படுத்தியது. இந்த ‘சாஃப்டெக்ஸ் எஃபெக்ட்’ படத்தின் அழகியலை மேம்படுத்தி, உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளுக்கு, மயக்கும் தன்மையைக் கொடுத்தது.
டிஸ்கோ லைட்ஸ் - 1970-களின் கலை விளையாட்டு: 1970-களின் இறுதியில், இந்தி சினிமாவில் தோன்றிய ‘டிஸ்கோ லைட்ஸ்’ பாணி, விரைவில் தென்னிந்திய திரைத்துறையிலும் பரவியது. ஒளியின் நட்சத்திர வடிவங்கள், நிறமாறும் பரவல்கள், பாரம்பரிய ஒளிப்பதிவுக்குப் புதுமையைத் தந்தன. சமீபத்தில் மறைந்த ஒளிப்பதிவாளர் பாபு, 1980-களில் இதை உச்சிக்குக் கொண்டு வந்து, ‘ஸ்டார் ஃபில்டர்’, ‘ரெயின் போ ஃபில்டெர்’, ‘ஸ்ப்லிட் டயாப்ட்டர்’ என்ற தொழில்நுட்பங்களை நுட்பமாகப் பயன்படுத்தினார்.
‘ஸ்டார் ஃபில்டர்’ வெளிச்சத்தின் புள்ளிகளைப் பிரகாசமான நட்சத்திரவடிவில் மாற்ற, ‘ரெயின்போ ஃபில்டர்’ ஒரு ஃபிரேமிலேயே பல வண்ணங்களை உருவாக்கியது. சகலகலா வல்லவன், பாயும் புலி போன்ற படங்கள் இந்தப் புதிய காட்சிப் போக்கை அக்காலத்தில் அடையாளமாக்கின. இந்த காலகட்டம் திரைத்துறையில் ஒரு காட்சித் திருவிழா போலவே இருந்தது.
வண்ண-விளையாட்டின் பரிணாமம்: வட இந்தியப் படங்களில், ஒளிப்பதிவாளர் மன்மோகன் சிங், யாஷ் சோப்ரா படங்களில் ‘என்ஹான்ஸ் ஃபில்டெர்கள்’ பயன்படுத்தி, வெளிப்புறக் காட்சிகளில் வண்ணங்களின் தீவிரத்தை உயர்த்தினார். மலைப்பகுதிகள், தோட்டங்கள், மலர்ச்செடிகள் எல்லாவற்றையும் அதீத பிரகாசமுள்ளதாகக் காட்சிப்படுத்தி, வண்ணத்தின் அழகைக் கதையின் உணர்ச்சி சூழலுடன் ஒருங்கிணைத்தார். இது திரைப்படங்களில் ஒரு ‘பிரகாசமான உலகம்’ என்ற எண்ணத்தை உருவாக்கியது.

ஒளி செதுக்குதல் - பி.சி. ஸ்ரீராமின் புரட்சி: 1990-களில், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ஒளியை நேரடியாக லென்ஸுக்குள் அனுமதித்து, ‘ஃபிளேர் எஃபெக்ட்ஸ்’ (ஒளிர்தல் விளைவுகள்), ‘ஸ்பாட்லைட் க்ளோ’ (ஒருமை ஒளியின் ஒளிர்வு), ‘ட்ரீம் லைக் டிஃப்யூஷன்’ (கனவு போன்ற பரவல்) போன்ற காட்சிப் பாணிகளை ‘எஸ்.எஃப்.எக்ஸ் ஃபில்டர்கள்’ மூலம் உருவாக்கினார்.
‘அக்னி நட்சத்திரம்’ படத்தில், ஒளி கேமரா லென்ஸுக்குள் ஊடுருவி, கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக மின்னியது. இது பாரம்பரிய ஒளிப்பதிவின் எல்லைகளை உடைத்து, ஒளியை ஒரு ‘கவிதைமிகு காட்சிப்பாடலாக்கம்’ போல மாற்றியது. இந்த பாணி பல புதுமுக ஒளிப்பதிவாளர்களுக்கு உத்வேகம் அளித்தது.
டிஜிட்டல் யுகம் - ஐஎஸ்ஓ மற்றும் என்டி ஃபில்டர்கள்: இன்றைய டிஜிட்டல் கேமரா யுகத்தில், அடிப்படை ஐஎஸ்ஓ அளவு 800 என்பதால், கேமரா மிகவும் உணர்ச்சிமிக்கதாக உள்ளது. அதிக ஒளியைக் கட்டுப்படுத்த ‘நியூட்ரல் டென்சிட்டி ஃபில்டர்கள்’ பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ‘என்டி பில்டர்கள்,’ ‘டெப்த் ஆஃப் ஃபீல்டு’ கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது, கதாபாத்திரம் தெளிவாகத் தெரிந்து, பின்னணி மென்மையாக மங்குமாறு, அல்லது மாறாக, காட்சியின் தேவைக்கு ஏற்ப அமைக்க உதவுகிறது. இது நவீன ஒளிப்பதிவில் சினிமாட்டிக் ஃபோகஸ் கன்ட்ரோலின் அடிப்படை கருவி.
கிரியேட்டிவ் டிஃப்யூஷன்: சில ஒளிப்பதிவாளர்கள், லென்ஸின் முன்மென்மையான காலுறை துணியை பொருத்தி, காட்சியில் மங்கல் அல்லது பரவல் தோற்றத்தை உருவாக்கினர். இது காதல் காட்சிகள், நினைவலைகள், கனவு போன்ற மனநிலையைக் காட்டும் காட்சிக் குறியீடுகளில் ஒரு மாயத்தன்மையை வெளிப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
மாறும் தொழில்நுட்பம் - நிலைக்கும் நோக்கம்: திரைப்படத்தில் ஃபில்டர் என்பது ஒரு தொழில்நுட்ப துணைக்கருவி மட்டும் அல்ல, அது காட்சியின் உணர்ச்சி வடிவமைப்பு ஆகும். இந்த ‘ஃபில்டர்யுகம்' தொழிலநுட்பம் மற்றும் கேமரா மொழி ஆகியவற்றோடு தொடர்ந்து பரிணாமம் அடைந்தாலும், அதன் அடிப்படை நோக்கம் மாறவில்லை. ஒளி, நிழல், வண்ணம் ஆகியவற்றின் விளையாட்டை உணர்வுகளின் மொழியாக மாற்றுவது. ஒரு காட்சியின் மகிழ்ச்சி, துக்கம், காதல், பயம் அனைத்தும், சரியான ஃபில்டர் தேர்வினால் வலுவூட்டப்படுகிறது.
(புதன் தோறும் ஒளி காட்டுவோம்)
முந்தைய அத்தியாயம்: நிழலும் உணர்வும்: திரை உலகின் இருள் பேசும் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 02
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT