Last Updated : 21 Oct, 2025 12:19 PM

4  

Published : 21 Oct 2025 12:19 PM
Last Updated : 21 Oct 2025 12:19 PM

டியூட், பைசன், டீசல் - தீபாவளி ரேஸில் முந்தியது யார்?

ஒரு வழியாக பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாத தீபாவளி பண்டிகை முடிந்திருக்கிறது. சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் இந்த தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களுமே அவற்றுகென முந்தைய வெற்றிகள், ட்ரெய்லர் பெற்ற வரவேற்பு, பாடல்கள் என சில எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்தன. எனினும் எதிர்பார்ப்புகளை மிஞ்சி இந்த தீபாவளி பந்தயத்தில் முன்னேறிய படம் எது என்பதை இங்கே பார்க்கலாம்.

டியூட்: ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் பிரதீப் ரங்கநாதனுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது மறுக்க முடியாத உண்மை. அது ‘டியூட்’ படத்திலும் நிரூபணம் ஆகியிருக்கிறது. ஒரு சிக்கலான கதையை எடுத்துக் கொண்டு அதை இளம் தலைமுறையினர் ரசிக்கும்படியும், அதேநேரம் பெரியவர்களும் வெறுக்க முடியாத அளவுக்கு தந்திருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். அந்த அடிப்படையில் இந்த தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் அதிக வசூல் செய்து வருவது இந்த படம் தான்.

— Mythri Movie Makers (@MythriOfficial) October 20, 2025

நான்கு நாட்களில் ரூ.83 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம், புக் மை ஷோ தளத்தில் சுமார் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறது என்பதைத் தாண்டி தமிழ் சினிமாவுக்கு கீர்த்தீஸ்வரன் என்ற புதிய நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

பைசன்: மாரி செல்வராஜின் முந்தைய படங்களின் வெற்றி, இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ‘டியூட்’ படத்துக்கு இருந்த அளவுக்கான ஓபனிங் இந்த படத்துக்கு இல்லையென்றாலும், வாய்வழி பாசிட்டிவ் விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் திரைகளும், முன்பதிவுகளும் அதிகமாகின.

சாதிய ஒடுக்குமுறைகளை கடந்து ஒரு விளையாட்டு வீரன் எப்படி உலக அளவில் முன்னேறி சாதித்தான் என்ற கதையை ஒரு நல்ல சினிமாவாக கொடுத்து மீண்டும் ஒருமுறை ஜெயித்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்தப் படம் துருவ் விக்ரமுக்கு மிகச் சிறந்த ஓபனிங்கை கொடுத்திருக்கிறது.

— Mari Selvaraj (@mari_selvaraj) October 19, 2025

முதல் நாளில் புக் மை ஷோ தளத்தில் 59 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும் விற்கப்பட்ட நிலையில், மெல்ல படிப்படியாக அதிகரித்து நான்காவது நாள் ஒரு லட்சத்து 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. டியூட் அளவுக்கு வசூல் இல்லையென்றாலும் இந்த தீபாவளிக்கு வெளியானதில் ஒரு நேர்த்தியான, நேர்மையான படைப்பு என்று தாராளமாக இதனை சொல்லலாம்.

டீசல்: டீசல் மாஃபியா என்ற மிக முக்கிய பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு இந்தப் படத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு படங்களோடும் ஒப்பிடுகையில், இந்தப் படத்துக்கு ப்ரோமோஷன் மிகவும் குறைவாகவே செய்யப்பட்டது. அதேபோல மற்ற இரண்டு படங்களுக்கும் கிடைத்த திரையரங்குகளை விட இப்படத்துக்கு கிடைத்த திரையரங்குகள் மிக குறைவு. இதனால் இயல்பாகவே இப்படத்தின் வசூலும் குறைந்துவிட்டது. இது குறித்து படத்தின் இயக்குநரே கூட சமூக வலைதளத்தில் வேதனை தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான மூன்று படங்களில் பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூலித்துள்ள படம் ‘டியூட்’தான். அதேவேளையில், ஒரு நல்ல சினிமாவுக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டு ஒரு தரமான படைப்பாக கொண்டாடப்படும் படம் என்றால், அது ‘பைசன் காளமாடன்’ தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x