Published : 20 Oct 2025 05:29 PM
Last Updated : 20 Oct 2025 05:29 PM
பள்ளிப் பருவத்தில் நான் கொஞ்சம் விளையாட்டுத்தன மானவன் என்றாலும் விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வம் கொண்டவன். பல போட்டிகளில் விரும்பி பங்கேற்பேன். அப்போது அங்கு, த்ரீ லெக்ட் ரேஸ் நடக்கும். அதாவது மூன்று கால் ஓட்டப்பந்தயம். இரண்டு பேர் பங்கேற்கும் போட்டி இது. ஒரு நண்பனின் ஒரு காலை, மற்றொரு நண்பனின் ஒரு காலுடன் கட்டி விடுவார்கள். அதோடு ஓட வேண்டும். இது எனக்குப் பிடித்த விளையாட்டு.
பிறகு, சாக்கு ரேஸ். கோணிப்பைக்குள் காலை விட்டுக் கொண்டு தாவித் தாவி ஓட வேண்டும். பிறகு ஐம்பது மீட்டர், நூறு மீட்டர் ஓட்டப்பந்தயங்களும் நடக்கும். இதில் எங்களை, பச்சை ஹவுஸ், மஞ்சள் ஹவுஸ், சிவப்பு ஹவுஸ், நீல ஹவுஸ் என்று அணி அணியாக உடற்பயிற்சி ஆசிரியர் பிரித்து விடுவார் . கீவளூர் டி.எஸ்.செல்வராஜ், பழனிவேல், பி.வி.தினகரன், டிஜி ராமலிங்கம், மோகன்தாஸ், ராஜா, சண்முகம் உள்பட எங்கள் நண்பர்கள் டீம் பெரிதாக இருந்தது.
அதில், ஜெயிப்பதற்கு நண்பர்களுக்குள் கடும் போட்டி நடக்கும். எங்களை அறியாமலேயே எங்களுக்குள் போட்டி மனப்பான்மை வந்துவிடும். ‘நீ ஜெயிக்கிறியா?நான் ஜெயிக்கிறேனான்னு பார்ப்போம்’ என்று சவால் விடுவதும் வாடிக்கையாக இருக்கும். சில நேரம் அந்த சவால்கள் கொஞ்சம் ஓவராகவும் போய்விடும்.

அதனால் விளையாட்டுகளுக்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வோம். விளையாட்டுப் போட்டிகளில் யாராவது ஒருவர் வென்றுவிட்டால், தோற்றவனுக்கும் அவனுக்கும் விரோதம் வந்துவிடும். பேச்சை நிறுத்திவிடுவோம். ஒரு வாரம் இப்படி ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு செல்வோம். அடுத்த வாரம் வந்ததும் மோதலை மறந்து நட்பாகி விடுவோம். அன்பை மட்டுமல்ல, கோபத்தையும் கொண்டதுதான் நட்பு என்பது அப்போது எங்களுக்கு தெரியாது.
ஆனால், அதை வளர வளர புரிந்து கொண்டோம். அப்போது விமானம் வானில் பறந்தால், மொத்த ஊரும் கூடி, எங்கோ உயரத்தில் சிறியதாக தெரியும் விமானத்தை, “அதோ போகுது பாரு, இதோ போகுது பாரு” என்று கையை காட்டிக்காட்டி பார்த்துக் கொண்டிருப்போம். இப்போது கூட விமானம் போனால், அதை வேடிக்கை பார்க்கும் பழக்கம் என்னைப் போலவே பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.
அப்போது நாகப்பட்டினம் அருகிலுள்ள வெளிப்பாளையத்தில், ஒரு ஹெலிகாப்டர் வந்தது. விமானத்தை விட ஹெலிகாப்டர் குறைவான உயரத்தில் பறந்து சென்றதைப் பார்த்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி. முதன்முதலாக ஒரு ஹெலிகாப்டரை பார்த்ததால், வகுப்பைக் கட்டடித்துவிட்டு, அது போகும் இடம் நோக்கி ஓடினோம்.
பிறகு அது ஒரு இடத்தில் இறங்கியது. அதனருகில் போய் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், தூரத்தில் நின்று நீண்ட நேரமாகக் கவனித்தோம். அது அப்படி, இது இப்படி என்று அப்போது எங்களுக்கு சுமாராக தெரிந்த விமான, ஹெலிகாப்டர் கதைகளை, அதன் வேகத்தை, அது பறப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஒரு முக்கால் மணி நேரத்துக்கு பிறகுதான், ஸ்கூல் நினைவு வந்து, திடுக்கிட வைத்தது. “டேய், ஸ்கூல்ல தேடுவாங்கடா” என்று அலறியடித்து ஓடினோம்.
போனால், எங்களுக்காகக் காத்திருந்தார் ஹெட்மாஸ்டர் ஜெயராமன் சார். எல்லோருக்கும் அடி. ஒருத்தனை அடிக்கும்போது, மற்றவர்கள் சத்தம்போடாமல் வகுப்பறையில் போய் உட்கார்ந்து தலையைக் குனிந்திருப்போம். ஆசிரியருக்குத் தெரியாதா என்ன? பிறகு எல்லோரும் வாங்குவோம் அடியை.

கள்ளம் கபடமில்லாமல் வாழ்ந்த அந்த நாட்கள் இப்போதும் மனதுக்குள் றெக்கைக் கட்டிக் கொள்கின்றன. எப்போதாவது ஊருக்கு போகிற நாட்களில் இரவு நேரங்களில் அந்த இடங்களை பார்ப்பேன். இரவில் பள்ளித் திறந்திருக்காது என்றாலும் அதன் வாசலில் நின்று ஏக்கமாகக் கவனிப்பேன். நாங்கள் விளையாடிய மைதானத்தை பார்க்கும் போது நினைவுகள் துள்ளியபடி வெளிவரும்.
மீண்டும் பள்ளி ஆண்டு விழா நாடகங்களில் நடிக்க மாட்டோமா, மீண்டும் ஒரு விளையாட்டுப் போட்டி வைத்து விளையாடித் தீர்க்க முடியாதா? என்று தோன்றும். அது முடியாது என்றாலும் மனதுக்கு யார் தடை போடுவது? ஏக்கங்கள் ஏக்கங்களாகவே இருக்கின்றன.
தேசிய விருது பெற்ற பிறகு, நண்பன் டி.எஸ்.செல்வராஜ் , “டேய், மாப்ள, தேசிய விருது பெரிய விஷயம், முதல்ல ஊருக்கு வா, உனக்குப் பாராட்டு விழா நடத்தணும்” என்று அழைத்தான். நான் அங்கு வரும் போது பார்க்கலாம் என்று மறுத்து விட்டேன்.
சமீபத்தில் திருச்செந்தூருக்கு படப்பிடிப்புக்காக செல்லும் வழியில் திருச்சியில் என் நண்பன் சண்முகத்தை சந்தித்து பேசினேன். படிக்கும் போது எப்படி திட்டிக் கொள்வோமோ, அதே போல இப்போதும் செல்லமாகத் திட்டி, செல்லமாகச் சண்டையிட்டு பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பேச்சில் நாங்கள் எங்களைத் தொலைத்திருந்தோம். அந்த உணர்வை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
(திங்கள்தோறும் பேசுவோம்)
முந்தைய அத்தியாயம்: அப்பா தந்த பயிற்சி... ‘பட்டாபி எனும் நான்’ - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 2
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT