Last Updated : 18 Oct, 2025 04:57 PM

3  

Published : 18 Oct 2025 04:57 PM
Last Updated : 18 Oct 2025 04:57 PM

‘பைசன் காளமாடன்’ விமர்சனம்: மாரி செல்வராஜின் மற்றொரு அழுத்தமான படைப்பு!

’பரியேறும் பெருமாள்’ தொடங்கி ‘வாழை’ வரை சமூக மாற்றத்துக்கு தேவையான அரசியலை ஜனரஞ்சக அம்சங்களுடன் கொடுத்து வரும் மாரி செல்வராஜ், தூத்துக்குடியில் பிறந்து இந்திய அளவில் கபடியில் சாதித்த மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள படம்தான் ‘பைசன் காளமாடன்’.

எந்நேரமும் வெடித்துச் சிதற காத்திருக்கும் சாதி மோதல்கள் நிறைந்த வனத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ் விக்ரம்) சிறுவயதில் இருந்தே கபடியில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் கபடியில் ஆர்வம் காட்டிய பலரும் வன்முறையில் இறங்கிவிட்டதால் தன் மகனும் அப்படி ஆகிவிடக்கூடாது என்று அஞ்சுகிறார் கிட்டானின் தந்தை வேலுசாமி (பசுபதி).

கிட்டானின் கனவை நனவாக்க பாடுகிறார் அவரது பி.டி. வாத்தியார் (அருவி மதன்). இன்னொருபுறம் ஊரில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களான பாண்டியராஜன் (அமீர்), கந்தசாமி (லால்) இருவருக்கும் இடையிலான பகை, ஊர் முழுக்க எதிரொலிக்கிறது. இந்தப் பகை கிட்டானின் வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியது? தன் முன்னால் இருந்த தடைகள் அனைத்தையும் கடந்து கிட்டான் சாதித்தது எப்படி என்பதை உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறது ‘பைசன் காளமாடன்’.

ஒரு பயோபிக் படத்தைப் பொறுத்தவரை அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்தேதான் ஆடியன்ஸ் அந்தப் படத்தை பார்க்க வருவர். அதையும் தாண்டி அவர்களை திருப்திப்படுத்தி வெளியே அனுப்பும் படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் ஜெயித்திருக்கிறார். தான் எடுத்துக் கொண்ட களத்தை ஒரு பயோபிக் என்ற அளவில் மட்டும் கையாளாமல் 90-களில் தென் மாவட்டங்களில் நடந்த நிஜ சம்பவங்களை மையப்படுத்தி, அதை மிக நுணுக்கமாகவும் நேர்மையாகவும் கையாண்டிருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக ஜப்பானில் இருக்கும் துருவ் விக்ரமின் நினைவலைகளில் இருந்து படம் நம் கண் முன்னே விரியத் தொடங்குகிறது. நாயகனின் பள்ளிப் பருவம், பி.டி ஆசிரியரின் உத்வேகத்தால் மெல்ல அவன் கபடியில் ஆர்வம் செலுத்தத் தொடங்குவது, அவனின் குடும்பப் பின்னணி, சாதி அரசியலுக்கு இடையே சிக்கித் தடுமாறும் அவனது லட்சியம் என நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதை நம்மை எங்கும் நகர விடாதபடி இழுத்துக் கொள்கிறது.

பேருந்தில் ஒரு ஆடு எதிர் தரப்பினரின் காலில் சிறுநீர் கழித்த விவகாரம் ஒரு நிமிடத்தில் எப்படி மிகப் பெரிய வன்முறையாக மாறுகிறது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதுதான் தனக்கு முதல் படம் என்று துருவ் விக்ரம் சொன்னது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. ஆனால், அவர் அப்படி சொன்னதற்கான காரணம், இந்தப் படத்தை பார்க்கும்போது விளங்குகிறது. டபுள் ஹீரோ படங்கள், ரீமேக் என நடித்தாலும் அவருடைய முழு நடிப்புத் திறமையையும் எந்தப் படமும் வெளிக்கொண்டு வரவில்லை. அதை சாத்தியமாக்கி இருக்கிறது ‘பைசன்’. கோபம், எமோஷனல், சோகம் என நடிப்பில் ஒரு பக்கம் மிளிர்ந்தாலும், இன்னொரு பக்கம் கபடிக்காக உடலளவிலும் கடுமையாக அவர் உழைத்திருப்பது கண்கூடாக திரையில் தெரிகிறது.

வழக்கம் போல இந்தப் படத்தில் மாரி செல்வராஜின் கதாபாத்திர தேர்வு வியக்க வைக்கிறது. துருவ் விக்ரமின் தந்தையாக பசுபதி வரும் ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதை உணர்த்தி அப்ளாஸ் பெறுகிறார். குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முன்பாக போலீஸிடம் தன் மகனுக்காக அவர் கெஞ்சும் காட்சியில் அவரது நடிப்பு கல் நெஞ்சையும் கரைத்து விடும். அமீர், லால், ரஜிஷா விஜயன், அருவி மதன் என நல்ல நடிகர்கள் யாரையுமே வீணடிக்காமல் செவ்வனே பயன்படுத்தி இருக்கிறார்.

படத்தில் ஒட்டாமல் துருத்திக் கொண்டு இருக்கும் ஒரே கதாபாத்திரம் அனுபாமா பரமேஸ்வரன் உடையது. அவரது கதாபாத்திரம் இல்லையென்றாலும் இந்த படத்துக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. எனினும் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் செய்யும் வகையில் நல்ல நடிப்பை தந்துள்ளார்.

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும், எழிலரசுவின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. காளமாடன் கானம், தென்னாடு பாடல்கள் சிறப்பு. கபடி தொடர்பான காட்சிகளில் எடிட்டர் சக்தி திரு தனித்து தெரிகிறார்.

பாடல்களை மான்டேஜ் ஆக பயன்படுத்தி இருந்தாலும் கூட அவை பெரும்பாலும் வேகத் தடைகளாகவே தோன்றுகின்றன. அனுபாமா, துருவ் இடையிலான காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வை தருகின்றன. க்ளைமாக்ஸுக்கு முன்னால் போலீஸ் திடீரென நல்லவர்களாக மாறுவது, இந்திய அணியில் துருவ் தேர்வானதே அப்போதுதான் முடிவாகி இருக்கும்போது அதை ஒரு போலீஸ்காரர் சொல்வது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை. இவற்றில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ரத்தமும் சண்டையும் அன்றாடம் ஆகிப் போன ஒரு மண்ணில் இருந்து தன் முன்னால் இருந்த அத்தனை தடைகளையும் உடைத்து ஒருவன் எப்படி முன்னேறிச் சென்றான் என்ற கதையை நேர்த்தியாகவும், அழுத்தமாகவும் சொல்லி மீண்டும் ஒரு புறக்கணிக்க முடியாத வெற்றியை பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். அறிவியல், தொழில்நுட்பம் முன்னேறிய ஏஐ காலத்திலும் கூட சாதிய ஒடுக்குமுறைகளும் ஆணவக் கொலைகளும் மலிந்து கிடக்கும் சூழலில் ‘பைசன் - காளமாடன்’ போன்ற படங்கள்தான் அதிகம் தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x