Published : 15 Oct 2025 08:10 AM
Last Updated : 15 Oct 2025 08:10 AM
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அக். 17-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில், பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, “சரத்குமார் சார் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. நான் பார்த்து வளர்ந்த ஹீரோவுடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவருடைய வயதும் எனர்ஜியும் எனக்குப் பயங்கர இன்ஸ்பிரேஷன். ‘லவ் டுடே’ படத்துக்காக ஹீரோயின் தேடிக்கொண்டிருந்த போது மமிதாவை ஒரு குறும்படத்தில் பார்த்தேன். அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தபோது அவர் ‘வணங்கான்’ படத்தில் அப்போது பிசியாக இருந்ததால் பிடிக்க முடியவில்லை. ஆனால், ‘டியூட்’ படத்தில் மமிதா நடிக்கிறார் என இயக்குநர் கீர்த்தி சொன்னபோது வியப்பாக இருந்தது. இதில் அவருக்கு வலுவான கதாபாத்திரம். இதுவரை பார்க்காத மமிதாவை, எமோஷனலான மமிதாவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள்.
‘லவ் டுடே’ முடிந்ததும் எனக்கு நிறைய கதைகள் வந்தன. அப்போது ‘டியூட்’ கதையும் வந்தது. ‘நான் கதைச் சுருக்கம் அனுப்புங்க’ என்று சொன்னேன். அனுப்பினார்கள். படித்துவிட்டு, ‘மீண்டும் ஒரு காதல் கதையில் நடிக்கணுமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது யார் எனக்குப் பேசினாலும் ‘கீர்த்தினு ஒரு டைரக்டர் உங்ககிட்ட கதை சொல்லணும்னு’ என்று ஆரம்பிப்பார்கள். பிறகு மைத்ரி மூவிஸில் இருந்து ஃபோன். ‘கீர்த்தி என்பவர் ஒரு கதை சொன்னார். கேட்கிறீர்களா?’ என்றார்கள். ‘நாம் வேண்டாம் என்று சொல்லியும், நம்மை ஒருத்தர் விரட்டிக் கொண்டே இருக்கிறாரே, அவரைப் பார்த்தே ஆக வேண்டும்’ என்று அழைத்துக் கேட்டேன். கதைச் சுருக்கத்தைவிட, ஒவ்வொரு காட்சியிலும் வசனத்திலும் என்னை மிரட்டிவிட்டார்.
இருந்தாலும் நான்கைந்து மாதம் விட்டுவிட்டேன். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் சொன்ன கதாபாத்திரம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. பிறகு நான் அவரை அழைத்தேன். அவர் ‘என்னை நம்புங்க’ என்றார். அவர் முயற்சி, எனக்குப் பிடித்திருந்தது. பிறகு ஆரம்பித்ததுதான் இந்தப் படம். நிச்சயம் ஒரு பெரிய இயக்குநராக கீர்த்தீஸ்வரன் வருவார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT