Published : 14 Oct 2025 12:38 PM
Last Updated : 14 Oct 2025 12:38 PM
’பைசன்’ கண்டிப்பாக தமிழ் சமூகத்தில் ஒரு அதிர்வை உண்டாக்கும் என்று மாரி செல்வராஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாரி செல்வராஜ் படக்குழுவினர் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு பேசிய காணொளி ஒளிபரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேடையில் முன்னணி நடிகர்கள் குறித்து பேசினார்.
மாரி செல்வராஜ் பேசுகையில், “எனது உச்சபட்ச கவுரவமாக நினைப்பது ’பைசன்’ படத்தை தான். இந்தப் படத்தில் தைரியமாக ஒரு விஷயத்தை கையாண்டுள்ளேன். இதுவரை என் படங்களில் என்னுடைய விஷயத்தை மக்களுக்கு தெரிவிப்பேன். முதல் முறையாக என் சமூகம், என் தென் தமிழகத்து மக்கள் சார்ந்த ஒரு கவலையை படமாக எடுத்திருக்கிறேன். கண்டிப்பாக ’பைசன்’ ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.
இதுவரை கற்றுக் கொண்ட ஒட்டுமொத்த சினிமா சார்ந்த விஷயங்கள், ‘பைசன்’ படம் பண்ணுவதற்கு தானோ என்ற உணர்வு படம் பார்க்கும் போது தோன்றியது. அப்படம் எனக்கு கொடுத்த அழுத்தம், கண்டிப்பாக இந்த தமிழ் சமூகத்துக்கும் கொடுக்கும் என நம்புகிறேன். பைசன் கண்டிப்பாக தமிழ் சமூகத்தில் ஒரு அதிர்வை உண்டாக்கும்” என்று பேசினார்.
மேலும் விக்ரம் குறித்து, “விக்ரம் சார் நீங்கள் இங்கு இல்லை. முதல் நாள் படப்பிடிப்பில் துருவ் உன் மகன் மாதிரி, உன்னை நம்பி விட்டுட்டு போகிறேன் என்று விக்ரம் சார் சொன்னார். அந்த நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன் என நினைக்கிறேன். விக்ரம் சார் நீங்கள் நம்புன மாதிரி, விரும்பின மாதிரி பைசன் இருக்கும். துருவ்வின் வெற்றியும் இருக்கும். இப்படத்தின் வெற்றியை உங்களுடைய நம்பிக்கைக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ராம் இது தான் எனது படங்களில் சிறந்தது என்று குறிப்பிட்டதாக மாரி செல்வராஜ் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT