Published : 13 Oct 2025 09:59 AM
Last Updated : 13 Oct 2025 09:59 AM
பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி சரியாக ஒரு வாரம் கடந்திருக்கிறது. இந்த முறை வழக்கத்தை விட பெரிய அளவில் பிரபலமாகாத முகங்கள்தான் அதிகம் என்பதாலோ என்னவோ முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளும் சரி, போட்டியாளர்களின் பங்களிப்பும் சரி பெரியளவில் சுவாரஸ்யம் தரவில்லை.
குறிப்பாக முந்தைய சீசன்களில் முதல் வாரம் என்பது இலகுவான டாஸ்க்குகளை கொண்டதாக இருக்கும். போட்டியாளர்களிடையே ஈகோவை தூண்டும் விதமாக இருந்தாலும் கூட அவர்களை எடுத்த எடுப்பிலேயே உளவியல் ரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தும்படி இருக்காது. ஆனால் இந்தமுறை முதல் வாரத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை என்ற கொடுமையான டாஸ்க்கை பிக்பாஸ் டீம் கொடுத்தது.
20 பேர் இருக்கும் ஒரு இடத்தில் தண்ணீர் பயன்பாட்டில் டாஸ்க் என்ற பெயரில் விளையாடுவதெல்லாம் மோசம். வார இறுதியில் விஜய் சேதுபதியிடம் கால் பக்கெட் தண்ணீரில் தான் குளித்துக் கொண்டிருக்கிறோம் என்று போட்டியாளர்கள் முறையிட்டதை பார்க்க முடிந்தது. இது போட்டியாளர்கள் மீதான உளவியல் தாக்குதல் மட்டுமின்றி, பார்க்கும் நமக்கும் ஒருவித அருவருப்பையும் ஏற்படுத்தியது. நல்ல வேளையாக இந்த வாரத்துடன் இந்த டாஸ்க் இழுத்து மூடப்பட்டு விட்டது.
போன சீசனில் விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் ஆரம்ப வாரங்களில் கலகலப்பாகவும், பக்குவமாகவும் நடந்து கொண்டார். ஆனால், இந்த சீசனில் முதல் வாரத்தில் அதுவும் நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு நிமிடங்களியே போட்டியாளர்களிடம் கடுமை காட்டத் தொடங்கியது ஏன் என்று புரியவில்லை.
குறிப்பாக, ஆதிரையிடம் அவர் நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒவ்வொருவராக வரிசையாக பேரை சொல்லுமாறு விஜய் சேதுபதி கூறியதும், முதலில் நான்கு பேர் எழுந்து நின்று தங்கள் பெயரை கூறி அமர்ந்தனர். ஐந்தாவதாக அமர்ந்திருந்த ஆதிரை எழுந்து நிற்காமல் கையை மட்டும் உயர்த்தி தனது பெயரை கூறினார். உடனே விஜய் சேதுபதி வாத்தியார் மோடுக்கு மாறி அவருக்கு கிளாஸ் எடுக்கத் தொடங்கிவிட்டார். முதலில் ஒரு போட்டியாளர் எதற்காக எழுந்து நிற்கவேண்டும்? அவர் அணிந்திருந்த ஆடை கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதற்காக கடுமையான தொனியில் விஜய் சேதுபதி பேசியது சரியான அணுகுமுறை அல்ல.
கடந்த சீசன்களில் அப்போதைய ஹோஸ்ட் கமல்ஹாசனுக்கு முன்னால் ஏதோ ஒரு போட்டியாளர் கால் மேல் கால் போட்டு அமர்வதை மற்ற போட்டியாளர்கள் ஒரு குற்றச்சாட்டாக கமலிடமே முன்வைத்தபோது, ‘அவர் கால் மீது அவர் காலை போடுவதில் எனக்கு என்ன பிரச்சினை’ என்று கேட்டு அதை மிகவும் பக்குவமாக கையாண்டார் கமல். தொடர்ந்து எல்லா சீசன்களிலும் அதை வலியுறுத்தியும் வந்தார். ஆனால் இந்த வார நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி செய்தது அதற்கு முற்றிலும் நேரெதிரான ஒன்று. அதற்கு சரியான விளக்கத்தையும் கூட கொடுக்காமல் சப்பை கட்டு கட்டி அடுத்த ஆளுக்கு தாவினார்.
அதேபோல கமருத்தீனிடமும் விஜய் சேதுபதி மற்றவர்களை காட்டிலும் சற்றே கடுமையாக நடந்து கொண்டதைப் போல தோன்றியது. திவாகரை கமருத்தீன் பேசிய வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது தான் என்றாலும், அவர் பலமுறை மன்னிப்புக் கேட்க சென்றபோதும் கூட திவாகர் அவரிடம் பேசவே தயாராக இல்லை. திவாகரிடம் அதுகுறித்து ஒரு வார்த்தை கூட கேட்காமல் கமரூத்தீனை மட்டுமே ‘வச்சு செய்து’ கொண்டிருந்தார் வி.சே.
இன்னொரு தருணத்தில் கமருத்தீன் லேசாக கொட்டாவி விட்டதை கவனித்து விட்ட விஜய் சேதுபதி அதை வைத்தும் ட்ரோல் செய்தார். தண்ணீர் பிடிப்பதற்காக சரியான தூக்கம் இல்லை என்று கூறியும் அதற்கு அவர் காது கொடுக்கவில்லை.
விஜய் சேதுபதியின் இந்த கடுமையின் தாக்கம் இடைவேளையில் ஆரோரா, ஆதிரை உள்ளிட்ட போட்டியாளர்கள் பேசிக் கொண்டதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
வார இறுதியில் கனிக்கு கிடைத்த கைதட்டலும், பார்வதிக்கு கிடைத்த டோஸும் இனிவரும் எபிசோடுகள் எப்படி இருக்கப் போகிறது என்ற ஓரளவு கணிக்க முடிகிறது. போட்டியாளர்களுமே கூட ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸை வைத்து இந்நேரம் தங்களை ‘ஸ்ட்ரேட்டஜி’யை திட்டமிடத் தொடங்கி இருப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT