Published : 12 Oct 2025 11:00 AM
Last Updated : 12 Oct 2025 11:00 AM

‘மகாமாயா’ - 3 கிளைமாக்ஸுடன் உருவான வரலாற்றுத் திரைப்படம்!

ஆரம்பகால தமிழ் சினிமாவின் நட்சத்திர வசனகர்த்தா இளங்கோவன். அக்காலத்தில் சூப்பர் ஹிட்டான அம்பிகாபதி, ஹரிதாஸ், கண்ணகி உள்பட பல படங்களின் வசனங்களை எழுதியவர் இவர். இவருடைய வசனங்களுக்காகவே பல படங்கள் வெற்றிபெற்றுள்ளன. 1943-ம் ஆண்டு வெளியான, புராணக் கதையை கொண்ட குபேர குசேலா வெற்றிபெற்றதை அடுத்து அதன் பாதிப்பில் இளங்கோவன் எழுதிய கதை ‘மகாமாயா’.

வரலாற்றுப் படமான இதில், பி.யு. சின்னப்பா, பி.கண்ணாம்பா, எம்.ஜி. சக்கரபாணி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எஸ். சரோஜா, ஆர். பாலசுப்பிரமணியம், டி. பாலசுப்பிரமணியம், எஸ்.வி. சஹஸ்ரநாமம், எம்.கே. மீனலோச்சனி, ‘பேபி’ டி.டி. குசலம்பாள், டி. ராஜ்பாலா, டி. ஆர். பி. ராவ் ஆகியோர் நடித்தனர்.

ஜுபிடர் பிக்சர்ஸ் சோமசுந்தரம், மொய்தீன் தயாரித்த இந்தப் படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். ஆங்கிலோ - இந்தியரான மார்கஸ் பார்ட்லி ஒளிப்பதிவு செய்தார். எஸ்.வி. வெங்கடராமன், குன்னக்குடி வெங்கடராம ஐயர் இசையமைத்தனர், கம்பதாசன், சுந்தர வாத்தியார் பாடல்கள் எழுதினர். 10 பாடல்கள் இடம்பெற்றன. அந்தக் காலகட்டத்தில் இது குறைவு. இருந்தாலும் சின்னப்பா பாடிய 'சிலையே நீ என்னிடம்' என்ற ஒரே ஒரு பாடல் மட்டுமே வரவேற்பைப் பெற்றது.

காந்தாரா தேசத்தின் இளவரசியான மகாமாயாவும் பக்கத்து நாட்டு இளவரசன் விக்கிரமசிம்மனும் ஒரே குருவிடம் கல்வி கற்கிறார்கள். அந்த நேரத்தில், பின் விளைவுகள் தெரியாமல் விக்கிரமசிம்மனின் வாளுக்கு விளையாட்டாக மாலை அணிவிக்கிறாள் மகாமாயா. அப்படி ஒரு வீரனின் வாளுக்கு பெண் ஒருவர் மாலை அணிவித்தால், அவனை அவள் மணந்து கொண்டதாக அர்த்தம். கல்வி முடிந்து தங்கள் நாடுகளுக்குச் செல்லும் அவர்கள், திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாமாயாவும், விக்கிரமசிம்மனும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேரும்போது, அவனுடைய வாளுக்கு அவள் மாலையிட்டதைச் சொல்லி, அவளை தனது மனைவி என்கிறான். அதிர்ச்சி அடையும் மகாமாயா, ஏற்க மறுக்கிறாள். இதனால், விக்கிரம சிம்மன் அவளை கடத்திச் செல்கிறான். அவனிடமிருந்து தப்பித்து, மகாமாயா தனது கணவனைச் சேரும்போது, கற்பு பற்றி பேசி அவளை ஏற்க மறுக்கிறான். தன் கற்பை நிரூபிக்க தனது குழந்தையைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்கிறாள் மகாமாயா. இதுதான் கதை.

மகாமாயாவாக கண்ணாம்பாவும் விக்கிரமசிம்மனாக பி.யு.சின்னப்பாவும் நடித்தனர். சிங்கன், மீரா என்ற வேடங்களில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்தனர். விக்கிரமசிம்மனின் நண்பன் நீலனாக எம்.ஜி.சக்கரபாணி நடித்தார்.

சூழ்ச்சி செய்யும் இந்த கதாபாத்திரம் மவுரிய பேரரசர் சந்திர குப்தரின் ஆலோசகராக இருந்த கவுடில்யரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாக கூறப்பட்டது. கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டர் இது. இந்த கதாபாத்திரத்தை, சிரித்துக் கொண்டே கொடுமைகள் செய்வது போல அமைத்திருந்தனர்.

ஆங்கிலப் படங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்ட கேரக்டர் அது. அப்போது இந்த கதாபாத்திரச் சித்தரிப்பை பார்வையாளர்கள் வித்தியாசமாகப் பார்த்தனர். பின்னர் பல படங்களில் வில்லனை கடுமையாகச் சிரிக்கவிட்டு கொடுமைகள் செய்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டதற்கு இந்தப் படம்தான் காரணம் என்பார்கள்.

கதையை எப்படி முடிப்பது என்பதில் கதாசிரியரும் வசனகர்த்தாவுமான இளங்கோவனுக்கு குழப்பம். இதனால் 3 கிளைமாக்ஸ் எழுதினார். இயக்குநரும், தயாரிப்பாளர்களும் எது வேண்டுமோ அதை முடிவு செய்யட்டும் என்று விட்டுவிட்டார். ஒன்றைத் தேர்வு செய்வதற்குப் பதில் 3 கிளைமாக்ஸையும் படமாக்கினர். பிறகு ஒன்றைத் தேர்வு செய்து வைத்தனர்.

1940-களின் பார்வையாளர்கள், வேறொருவர் மனைவி மீது மன்னர் ஆசைப்படுவதை ஏற்கவில்லை. திருமணமான பெண்ணைக் கடத்தியது, அவனிடம் இருந்து தப்பி வந்த மனைவியை, கணவன் சந்தேகிப்பது, கற்பை நிரூபிக்கத் தன்னையே நாயகி அழித்துக் கொள்வது என்பதை அப்
போதைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தோல்வியை தழுவியது.

1944-ம் ஆண்டு அக். 16-ல் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தாலும் கண்ணாம்பா, பி.யு.சின்னப்பா, சக்கரபாணியின் நடிப்புப் பாராட்டப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x