Published : 30 Sep 2025 06:49 PM
Last Updated : 30 Sep 2025 06:49 PM

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

கோப்புப் படம்

சென்னை: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகிய இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித் தோழி, சினிமா பின்னணிப் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த 12 ஆண்டு கால திருமண உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நிரந்தரமாக பிரிய முடிவு செய்த அவர்கள் இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இருவரும் மனமொத்து பிரிவதாக தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை கோப்புக்கு எடுத்துக் கொண்ட சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, சட்டப்படி ஆறு மாத கால அவகாசம் வழங்கி, விசாரணையை தள்ளிவைத்திருந்தார். ஆறு மாத காலம் முடிந்த நிலையில், இந்த வழக்கு செப்டம்பர் 25-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகியிருந்தனர். இருவரும் விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக நீதிபதி முன் தெரிவித்தனர்.

குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் குமார் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, ஜி.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி தம்பதிக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x