Published : 25 Sep 2025 11:21 PM
Last Updated : 25 Sep 2025 11:21 PM
சென்னை: “படிக்காமல் ஜெயித்தவர்கள் சில நூறு பேர்கள்தான். ஆனால் கல்வியால் ஜெயித்தவர்கள் தான் இங்கு அதிகம்” என்று ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதில் ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசியதாவது: “நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன்தான். பஸ் பாஸில் இருந்து, முதல் தலைமுறை பட்டதாரி, கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகளில் பொறியியல் முடித்த ஒரு மாணவன். நான் ஒரு மிடில் கிளாஸ். நகரத்தில் இருக்கும் மிடில் கிளாஸ் அல்ல. கிராமத்தில் இருக்கும் மிடில் கிளாஸ். நாங்கள் இட்லி, கறி எல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் வாங்குபவர்கள் அல்ல. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே வாங்குபவர்கள். எனவே அரசின் இதுபோன்ற இலவசங்கள் எங்களுக்கு எவ்வளவு உதவின என்பதை நான் உணர்ந்தவன்.
ஒருவேளை சாப்பாட்டின் அருமை எனக்கு தெரியும். இன்று இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் 24 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். இதனை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. பெரிய முதலாளிகளின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் அரசாங்கத்துக்கு மத்தியில் பாமரர்களின் குழந்தைகளின் கோரிக்கைக்காக ஒரு திட்டத்தை நிறைவேற்றிய இந்த அரசுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
சச்சின் டெண்டுல்கர் படித்தாரா? இளையாராஜா படித்தாரா? ஏ.ஆர்.ரஹ்மான் படித்தாரா? என்று நிறைய பேர் கேட்பார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். அப்படி ஜெயித்தவர்கள் சில நூறு பேர்கள்தான். ஆனால் கல்வியால் ஜெயித்தவர்கள் தான் இங்கு அதிகம். நீங்கள் அதையே பின்தொடருங்கள். விதிவிலக்குகள் எப்போதும் உதாரணங்கள் ஆகாது” இவ்வாறு தமிழரசன் பச்சமுத்து தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT