Published : 25 Sep 2025 04:41 PM
Last Updated : 25 Sep 2025 04:41 PM
சென்னை: இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி, விவாகரத்து கோரிய வழக்கில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.ஜி.வி.பிரகாஷ் - சைந்தவிக்கு தம்பதியருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவித்திருந்தனர். இதையடுத்து பரஸ்பரம் விவாகரத்து கோரி ஜி.வி பிரகாஷ் சைந்தவி இருவரும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து தொடர்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கி இருந்தது. இந்த 6 மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர்.
ஜி.வி பிரகாஷ், சைந்தவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஜெம்லெஸ் காந்தி, ஜெ.ஜெயன் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்து அடுத்த விசாரணையின் போது இந்த வழக்கில் ஆஜாராக தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் சைந்தவி, ஜி.வி.பிரகாஷ் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் பிரிந்து வாழவே விரும்புவதாகவும் தனித் தனியாக கூண்டில் ஏறி நீதிபதியிடம் தெரிவித்தனர்.
அப்போது உங்களின் பெண் குழந்தையை யார் கவனித்து கொள்ள போகிறீர்கள் என நீதிபதி இருவரிடமும் கேள்வி எழுப்பினார். குழந்தையை சைந்தவி கவனித்து கொள்ள தனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என ஜிவி பிரகாஷ் தெரிவித்தார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விவகாரத்து கோரிய மனு மீது செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக கூறி வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT