Published : 25 Sep 2025 07:29 AM
Last Updated : 25 Sep 2025 07:29 AM
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
அதன் 2-ம் பாகம் படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா...’ என்ற பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பாடலுக்கு எதிராக பத்ம விருதுபெற்ற கர்னாடக இசைப் பாடகர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர், டெல்லி உயர்நீதி மன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்தப் பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை இயற்றிய ‘சிவ ஸ்துதி’ பாடலின் நகல் என்றும் உரிய அனுமதி பெறாமல் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியுள்ளார் என்றும் அதைப் பயன்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு நீதிமன்ற பதிவாளரிடம் ரூ.2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அதிலிருந்து ரூ. 2 லட்சத்தைப் பாடகர் ஃபயாஸுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹரி சங்கர், ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு நேற்று வந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில், ‘வீரா ராஜ வீரா’ பாடல் ‘சிவ ஸ்துதி’ பாடலை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று வாதிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அத்தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் மேல்முறையீடு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் கொள்கை அடிப்படையிலேயே இத்தடை பிறப்பிக்கப் பட்டிருப்பதாகவும், பாடல்கள் குறித்து இன்னும் ஆராயவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT