Last Updated : 23 Sep, 2025 11:03 PM

 

Published : 23 Sep 2025 11:03 PM
Last Updated : 23 Sep 2025 11:03 PM

“விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்” - சாந்தனு ஓபன் டாக்!

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மணிகண்டன் உள்ளிட்டோரிடமிருந்து தான் கற்றுக் கொள்வதாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

நடிகர் சாந்தனு, ஷேன் நிகாமுடன் இணைந்து நடித்துள்ள மலையாளப் படம் ‘பல்டி’. விளையாட்டுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார். எஸ்டிகே ஃபிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரித்துள்ளனர்.

இப்படம் குறித்த பேட்டி ஒன்றில் பேசிய சாந்தனு தனது தோல்விகள் குறித்து மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் அறிமுகம் ஆனபோது சாந்தனு பாக்யராஜ் என்றுதான் அறிமுகம் ஆனேன். ஏனென்றால் நான் வளர்ந்த சூழ்நிலைகள் அப்படி. பாக்யராஜின் மகன் என்பதால்தான் எனக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் முதல் படம் சரியாக போகாததால் எனக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் சிலர் பின்வாங்கிவிட்டனர்.

அதன்பிறகும் அப்பாதான் எனக்கு உதவ முன்வந்தார். ஆனால் அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அடுத்த 2,3 ஆண்டுகளில் ஏதோ தவறாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அந்த பக்குவம் எனக்கு வருவதற்குள் நான் ஏற்கெனவே சரிவை சந்தித்துவிட்டேன். அந்த காலகட்டத்தில் யாரெல்லாம் ஜெயிக்கிறார்கள் என்பதை கவனித்தேன். 2014,2015 காலகட்டத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சமீபத்தில் மணிகண்டன் ஆகியோரை கவனித்தேன்.

அவர்கள் எல்லாம் படிப்படியாக, அடிமட்டத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள். இந்த கற்றலைத்தான் நான் தவறவிடுகிறேன். அடிப்படையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களை உதாரணமாக வைத்து நான் கற்றுக் கொள்ள தொடங்கினேன். எலைட் ஆக, சாக்லேட் பாய் ஆக நடிக்காமல் மக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்” இவ்வாறு சாந்தனு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x