Published : 20 Sep 2025 08:06 AM
Last Updated : 20 Sep 2025 08:06 AM

ஒளிவிளக்கு: எம்.ஜி.ஆரிடம் சவுகார் ஜானகி கேட்டு வாங்கிய கதாபாத்திரம்!

எம்.ஜி.ஆரின் நூறாவது படம், ‘ஒளிவிளக்கு’. அவர் படங்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அதனால் அவருடைய நூறாவது படத்தைத் தயாரிக்க அப்போது முன்னணியில் இருந்த பல நிறுவனங்கள் போட்டியிட்டன.

ஆனால், அந்த வாய்ப்பை, எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனத்துக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். அதற்குக் காரணம், அவருடைய முதல் படமான ‘சதிலீலாவதி’யின் கதை, எஸ்.எஸ்.வாசனுடையது. அதனால் தனது நூறாவது படத்தைப் பிரம்மாண்ட நிறுவனமான ஜெமினி தயாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தார், எம்.ஜி.ஆர். ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப் படமாக உருவானது.

இந்தியில் தர்மேந்திரா, மீனாகுமாரி நடித்து வெற்றி பெற்ற ‘பூல் அவுர் பத்தர்’ (1966) படத்தின் ரீமேக் இது. பாலிவுட்டில் தர்மேந்திராவை சூப்பர் ஸ்டாராக்கிய படங்களில் இதுவும் ஒன்று.

ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆருடன், ஜெயலலிதா, சவுகார் ஜானகி, அசோகன், சோ, மனோகர், வி.எஸ்.ராகவன், கள்ளபார்ட் நடராஜன், தேங்காய் சீனிவாசன், காந்திமதி, சிஐடி சகுந்தலா என பலர் நடித்தனர். எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘புதிய பூமி’ படங்களை இயக்கிய சாணக்கியா, இதை இயக்கினார். சொர்ணம் வசனம் எழுதினார். ராஜகோபால் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். பாடல்களை வாலி எழுதினார். மொத்தம் 7 பாடல்கள். அனைத்தும் ஹிட்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாகிறான், நல்ல மனமும் அன்பும் கொண்ட முத்து. ஒரு பங்களாவுக்கு திருடச் செல்லும்போது, அங்கு உடல் நலமின்றி இருக்கும் விதவையான சாந்திக்கு உதவுகிறான். பின்னர் அவரை அழைத்து வந்து அடைக்கலம் கொடுக்கிறான்.

ஒரு கட்டத்தில் திருட்டுத் தொழிலை விட்டுவிடும் முத்துக்கும் நடனக்கலைஞரான கீதாவுக்கும் காதல். முத்துவின் கும்பலைச் சேர்ந்தவர்கள் குடிசைகளுக்குத் தீவைத்து விடுகிறார்கள். எல்லோரையும் காப்பாற்றும் முத்துக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டு விடுகிறது. முத்து, குணமாக வேண்டும் என்பதற்காகச் சாந்தியும் மக்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.

ஒரிஜினல் கதையான இந்தியில், ஹீரோவுக்கும் விதவைக்கும் இடையே காதல் உருவாவது போலவும் இறுதியில் அது திருமணத்தில் முடிவதாகவும் காட்டியிருந்தார்கள். ஆனால், தமிழில், எம்.ஜி.ஆருக்காக கதையில் மாற்றம் செய்தார்கள். எம்.ஜி.ஆர் குடிகாரர் போல நடித்த படம் இது. அதை யாரும் பின்பற்றி விடக்கூடாது என்பதற்காகவே, தன் மனசாட்சியே தன்னைக் கேள்வி கேட்பது போல, ‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா?’ என்ற பாடலையும் வைத்திருந்தார். கதைப்படி, எம்.ஜி.ஆர் பிழைப்பது கஷ்டம் என்று மருத்துவர் சொல்ல, சவுகார் ஜானகி மனமுருகி பாடும், ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’ என்ற பாடல் பிரபலமானது. எம்.ஜி.ஆரின் இயல்பான வள்ளல் குணத்தை வைத்து எழுதப்பட்ட பாடல் இது.

நிஜ வாழ்க்கையில் அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, இந்தப் பாடல் தமிழகம் முழுவதும் ஒலித்தது குறிப்பிடத்தக்கது. ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’, ‘ருக்குமணியே...’, ‘மாம்பழத் தோட்டம்...’ ஆகிய பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.

இந்தியில் விதவை கதாபாத்திரத்தில், மீனா குமாரி நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தை எம்.ஜி.ஆரிடம் கேட்டுப் பெற்றார், சவுகார் ஜானகி. படத்தின் டைட்டில் கார்டில், சீனியரான சவுகார் ஜானகி பெயரை முதலில் போட படக்குழு முடிவு செய்தபோது, தனது பெயர்தான் முதலில் வரவேண்டும் என்று ஜெயலலிதா பிடிவாதம் பிடித்ததாகச் சொல்வார்கள். அதன் காரணமாக, ஜெயலலிதா பெயருக்கு அடுத்துதான் சவுகார் ஜானகி பெயர் இடம் பெற்றது.

1968-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியது. 1979-ம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் ரீ ரிலீஸாகி இந்தப் படம் நூறு நாள் ஓடி சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x