Published : 19 Sep 2025 08:59 PM
Last Updated : 19 Sep 2025 08:59 PM
சென்னை: ‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படை போலீசார் கடந்த 2004-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், ”படையாண்ட மாவீரா” என்ற படத்தின் போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுளளது. அதில் எனது கணவர் வீரப்பனை போல மீசை வைத்து நபர் உள்ளார். பார்ப்பதற்கு எனது கணவர் புகைப்படத்தையே சித்தரிக்கிறது.
எனது கணவரின் படத்தை பயன்படுத்துவதற்கு முன்பு என்னிடம் சட்டப்படி அனுமதி பெற்று இருக்க வேண்டும். என்னிடம் அனுமதி பெறாமல் இந்தப் படத்தில் எனது கணவரை மையமாக வைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டு இருக்கும் என்று கருதுகிறோம். இதனால், எனது கணவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தப் படத்தை வி.கே.புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முத்துலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுவேதா ஸ்ரீதர், “இந்தப் படத்தின் மூலம் மனுதாரருக்கு மன உளைச்சலுடன், அவரது கணவரின் புகழுக்கு களங்கமும் ஏற்படும். எனவே, படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, இந்த வழக்குக்கு தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற செப்.26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT