Last Updated : 18 Sep, 2025 09:48 PM

 

Published : 18 Sep 2025 09:48 PM
Last Updated : 18 Sep 2025 09:48 PM

பிரபல நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். தனது அபாரமான மிமிக்ரி திறமை மூலம் தொலைகாட்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இவரும் சுட்டி அரவிந்தும் சேர்ந்து செய்யும் நகைச்சுவைகள் அப்போது பிரபலமாகின. மேடைகளில் ரோபோ போல இவர் ஆடும் நடனத்தின் மூலம் இவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது.

தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் - அப் காமெடி, மிமிக்ரி செய்து வந்தவர் திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரா படத்தில்தான் முழுநீள கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது. பின்னர் தொடர்ந்து ’கப்பல்’, ‘மாரி’, ’வாயை மூடி பேசவும்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. விஷ்ணு விஷாலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இவரது நகைச்சுவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை ஏற்பட்டதால் கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார்.

இந்த நிலையில், அண்மையில் உடல்நலக் குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (செப்.18) சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் மறைவுக்கு கமல்ஹாசன் பதிந்த இரங்கற்பா:

ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x