Published : 17 Sep 2025 07:28 AM
Last Updated : 17 Sep 2025 07:28 AM

‘இன்பவல்லி’ - கடந்த காலம் எதிர் காலம் காட்டும் கண்ணாடி!

மலையாள சினிமாவின் முதல் பேசும் படமான ‘பாலனை’ (1938) இயக்கியவர் எஸ்.நொடானி. இவர் தமிழில் ‘சந்தனதேவன்’, ‘சத்யவாணி’, ‘பக்த கவுரி’, ‘சிவலிங்க சாஷி’ என சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் ஒன்று ‘இன்பவல்லி’. அந்த கால ஃபேன்டஸி படமான இது, ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்’ கதை ஒன்றின் பாதிப்பில் உருவானது.

இளவரசிக்கும் அமைச்சரின் மகனுக்கும் இடையிலான காதல்தான் கதை. இளவரசியும் அமைச்சர் மகனும் ஒன்றாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் காதலில் விழுகிறார்கள். ஆனால் பட்டத்து ராணிக்கு, ஓர் இளவரசனுக்குத்தான் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம். இதை அறியும் காதலர்கள், ஓர் இரவில் அரண்மனையை விட்டு ஓடிவிடுகிறார்கள். இளவரசியின் மீது மோகம் கொண்ட மந்திரவாதி ஒருவன், அமைச்சரின் மகனைத் தனது மந்திர சக்தியால் கண்டுபிடித்து, வைத்துக் கொள்கிறார். ஆனால், வயதான பெண்மணி ஒருவர், அமைச்சரின் மகனைக் கிளியாக மாற்றிக் காப்பாற்றுகிறாள். பறந்து சென்று தப்பிக்கும் கிளி என்ன செய்கிறது, பிறகு காதலர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்கிறது இந்தப் படம்.

மனிதர்கள், கரடிகளாகவும் குரங்குகளாகவும் மாறுவது, ஒருவரின் கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் காட்டும் மாயாஜால கண்ணாடி போன்றவை இந்தப் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டின. சியாமளா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், சேலம் ரத்னா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது.

டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாகவும் நாயகியாக பி.எஸ்.சரோஜாவும் மந்திரவாதியாக எம்.ஆர்.சுவாமிநாதனும் நடித்தனர். என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், பி.கே. சரஸ்வதி, ஈ.ஆர்.சகாதேவன், கே.எஸ்.அங்கமுத்து, டி.வி.சேதுராமன், சி.வி.வேலப்பா, பி.சுந்தர் ராவ், ஏ.வி.ராம்குமார், ஆர்.விநாயகம், எஸ்.மேனகா, எம்.டி.கிருஷ்ணா பாய், எம்.லட்சுமணன், எம்.சரோஜா, சேதுலட்சுமி, கே.ஜெயலட்சுமி, பாக்யலட்சுமி, கே.எஸ்.ஹரிஹர ஐயர், ‘காக்கா’ ராதாகிருஷ்ணன், எம்.சாமிநாதன் என பலர் நடித்தனர்.

இதன் கதையை, அப்போது பிரபலமாக இருந்த பி.ஏ.குமார் எழுதினார். வசனத்தை இளங்கோவன் மற்றும் எம்.லட்சுமணன் எழுதினர். ஜி.ராமநாதன் இசையமைக்க, பாடல்களை பாபநாசம் ராஜகோபால ஐயர், கே.பி.மீனாட்சி சுந்தரம் எழுதினர். மொத்தம் 20 பாடல்கள்! சரோஜா பாடிய 'யார் உமைப் போலே அவனியிலே' என்ற நடனப் பாடல் அப்போது பிரபலமானது. இதில் நாயகியாக நடித்த சரோஜா, ஜெமினி ஸ்டூடியோவின் குழு நடனக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். தன்னுடைய திறமையின் மூலம் நாயகியான அவர், தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இதில் இடம்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணனின் 'பொய்க்கால் குதிரை ஆட்டம்' அப்போது அதிகம் ரசிக்கப்பட்டது.

1949-ம் ஆண்டு செப்.16-ல் வெளியான இந்தப் படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாகச் செயல்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x