Published : 15 Sep 2025 07:40 AM
Last Updated : 15 Sep 2025 07:40 AM
திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருக்கிறார், சென்னையை சேர்ந்த குமரன் (குமரன் தங்கராஜன்). தயாரிப்பாளரை தேடி ஓய்ந்து போன அவர், தனது பூர்வீக வீட்டை விற்று, படம் எடுக்க முடிவெடுக்கிறார். இந்த நேரத்தில் வீட்டின் முதல் மாடியில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் வரதராஜன் ( இளங்கோ குமரவேல்) மர்மமாக இறந்து கிடக்கிறார். போலீஸ் விசாரணையில் குமரனும் சிக்குகிறார். வரதராஜனை கொன்றது யார்? குமரனின் சினிமா கனவு என்ன ஆனது என்பது கதை.
நகைச்சுவை மற்றும் எமோஷன் காட்சிகளை கலந்து ஒரு குடும்பப் பொழுதுபோக்குப் படத்தைத் தந்திருக்கிறார், இயக்குநர் பாலாஜி வேணுகோபால். அவருடைய கதாபாத்திர தேர்வும் வடிவமைப்பும் காட்சிப் படுத்திய விதமும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. முதலில் சீரியஸாக தொடங்கும் படம் பிறகு அதை அம்போவென விட்டுவிட்டு நகைச்சுவைக்குத் தாவுவது குறையாகத் தெரிந்தாலும் அக்குறைகளை நகைச்சுவைக் காட்சிகள் மறக்கடிக்கின்றன. சில இடங்களில் 'சீரியல்' உணர்வு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் சிபிஐ ஆபிசர் என வரும் வினோத் சாகரின் தொடர் காமெடி காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அவருடன் பாலசரவணனும் தன் பங்குக்கு , ஒன் லைன் கவுன்ட்டர்களில் ரசிக்க வைக்கிறார்.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரனுக்கு, இது சிறந்த திரை அறிமுகம். எமோஷன் மற்றும் காமெடி காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். நாயகி பாயலுக்கு அதிக வேலையில்லை. ஜி.எம்.குமார், இளங்கோ குமரவேல் நடிப்பில் அனுபவம் பளிச்சிடுகிறது. சிவா அரவிந்த், வினோத் முன்னா உள்ளிட்ட நடிகர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
அச்சு ராஜாமணியின் பின்னணி இசையும் ஜெகதீஷ் சுந்தரமுர்த்தியின் ஒளிப்பதிவும் ஒரு காமெடி படத்துக்கான 'சம்பவத்தை' செய்திருக்கின்றன. இரண்டு மணி நேரப் படத்தில் மதனின் படத்தொகுப்பு சிறப்பு என்றாலும் சில காட்சிகளை இன்னும் கச்சிதமாக்கி இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT