Published : 14 Sep 2025 09:40 PM
Last Updated : 14 Sep 2025 09:40 PM
கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழாவை நடத்தியது.
இதில் தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இளையராஜா பங்கேற்று சிறப்பித்தார். அவரது சிம்பொனி இசையும் அரங்கேற்றப்பட்டது.
இதனையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் பேசியதாவது: “இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனிப் பெருமையைத் தேடித் தந்தவர். இமாலய சாதனையும் எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதரும் ஆவார். சாஸ்திரீய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை இவற்றிற்கிடையே நிலவிய வேறுபாடுகளைத் தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசைமேதை அவர்.
குறிப்பாக திரையிசையைக் கடந்து முழுமையான மேற்கத்தியச் செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தியிருக்கும் இருக்கும் சிம்ஃபொனி என்ற சாதனை ஒவ்வொரு இசைக் கலைஞர்களுக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்குமளிக்கக்கூடிய சாதனையாக இருக்கிறது. அவரை பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எப்போதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் உங்களைப் போலவே நானும் பெருவகை கொள்கிறேன்.
இளையராஜாவின் பொன்விழா ஆண்டை தமிழ்நாட்டு அரசே ஒருங்கமைத்துக் கொண்டாடுவதை இளையராஜாவுக்கு மட்டுமான விழாவாக அல்லாத ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே” இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா- இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பதிவு #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @arrahman pic.twitter.com/FOpB35LrJM
— TN DIPR (@TNDIPRNEWS) September 14, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT