Last Updated : 11 Sep, 2025 12:34 PM

 

Published : 11 Sep 2025 12:34 PM
Last Updated : 11 Sep 2025 12:34 PM

பயணம் முடிவடையவில்லை; இது ஒரு தொடக்கமே: விஷால் உருக்கம்

இந்த பயணம் முடிவடையவில்லை, இது ஒரு தொடக்கமே என்று விஷால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

‘செல்லமே’ படம் மூலம் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானவர் விஷால். அவர் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷால்.

அதில் விஷால், “இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோருக்கும், என் குருநாதர் அர்ஜுன் அவர்களுக்கும், லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் இராஜநாயகம் அவர்களுக்கும், மேலும் என்னை உயர்த்தி அழகு பார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல கனவுடன் திரையுலகில் அடியெடுத்து வைத்த என்னை, இன்று உங்கள் அன்பினால், உங்களின் நம்பிக்கையில், உங்கள் கரகோஷத்தில் வாழும் நடிகனாக மாறியிருக்கிறேன். இந்த வெற்றி பயணத்தை என்னுடைய வெற்றியாக இல்லாமல் நமக்கான வெற்றியாக பார்க்கிறேன்.

எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், என்னை செதுக்கிய இயக்குநர்கள் என்னுடன் ஒவ்வொரு படத்திலும் உழைத்த இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், துணை நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் என் படங்களை உங்களிடம் கொண்டு சேர்த்த திரையரங்கு உரிமையாளர்கள், வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு ஆப்பரேட்டர்கள் மற்றும் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்கள், சமூக ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஆனால் இவைகளை எல்லாம் விட பெரிய சக்தியாக நான் கருதுவது என் உயிரான என் ரசிகர்கள். தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களான உங்கள் அன்பே என் உயிர். உங்கள் நம்பிக்கையே என் வலிமை. “நான் விழுந்தாலும் என்னை எழவைக்கும் எழுச்சி குரல்” நீங்கள் தான். என் நம்பிக்கையும் நீங்கள் தான். இந்த இருபத்தொன்று ஆண்டுகளில் எத்தனை சோதனைகளும், எத்தனை சவால்களும் வந்தாலும், எனக்கு துணையாக நின்று, என் அருகில் தோல் கொடுக்கும் தோழனாக இருந்தது நீங்கள் தான்.

நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும், நான் தேர்வு செய்யும் ஒவ்வொரு கதையும், நான் வாழும் ஒவ்வொரு நொடியும், உங்களுக்காகவே இருக்கும். உங்களை மகிழ்விக்கவே இருக்கும். இந்த பயணம் முடிவடையவில்லை, இது ஒரு தொடக்கமே. நான் வெறும் நன்றி என்ற வார்த்தைகளால் முடிக்காமல் உங்களால் அடையாளம் காட்டப்பட்ட நான் எனது "தேவி அறக்கட்டளை" மூலம் ஏழை, எளிய பெண் கல்விக்கும் மாணவ, மாணவிகள் முன்னேற்றத்திற்க்காக செயல்படுத்தி வருகிறோம், எம்மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை நானும் என் இயக்கமும் என்றென்றும் செய்வோம். நான் உங்களில் ஒருவன், உங்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x