Last Updated : 10 Sep, 2025 10:09 AM

 

Published : 10 Sep 2025 10:09 AM
Last Updated : 10 Sep 2025 10:09 AM

யார் இந்த சத்யன்? - அசத்தல் பாடல்களை கொடுத்த ‘அண்டர்ரேட்டட்’ பாடகர்!

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் சத்யன் என்ற பெயர் காணப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இசைக் கச்சேரியில் அவர் பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலின் காணொலி துணுக்கு எங்கு பார்த்தாலும் பகிரப்பட்டு வருகிறது. அதில் மேடையில் அநாயச தோரணையுடன் அவர் அந்தப் பாடலை பாடும் விதத்தை பலரும் சிலாகித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதும் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகிவிட்டார் சத்யன்.

ஜென் Z கிட்ஸ் மத்தியில் அதிகமாக புழங்கப்படும் ஒரு சொல் ‘அண்டர்ரேட்டட்’. அதாவது ஒரு பாடலோ படமோ வெளியான சமயத்தில் அதிகம் கவனிக்கப்படாமல் போயிருந்தால் அவற்றை ‘அண்டர்ரேட்டட்’ என்று குறிப்பிடுவர். அந்த வகையில் பல அசத்தலாக பாடல்களை பாடியிருந்தும் பலருக்கும் தெரியாமல் உண்மையாகவே ‘அண்டர்ரேட்டட்’ பாடகராக இருந்திருக்கிறார் இந்த சத்யன்.

சென்னையின் பிறந்த வளர்ந்தவரான சத்யனின் இயற்பெயர் நீதி மோகன். பின்னாட்களில் இவர் தன்னுடைய பெயரை சத்யன் என்று மாற்றிக் கொண்டுள்ளார். பள்ளி காலங்களிலேயே இசையின் மீதான ஆர்வத்தால் லைட் மியூசிக் கச்சேரிகளில் பங்கேற்று பாடி வந்திருக்கிறார். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் இதுகுறித்து சத்யனின் அம்மாவை அழைத்து எச்சரித்ததையும், எனினும் குமார் என்ற ஆசிரியர் மற்ற ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி தன்னை ஊக்குவித்ததை சத்யன் அண்மையில் நினைவுகூர்ந்திருந்தார்.

எம்பிஏ படிப்பை முடித்தாலும் சத்யனின் விருப்பமெல்லாம் பாடகர் ஆகவேண்டும் என்பதிலேயே இருந்தது. 1996 முதல் சுமார் 2,500 மேடைக் கச்சேரிகளில் பாடியிருக்கிறார் சத்யன். சத்யனை முதன்முறையாக சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். கமல்ஹாசன் நடித்த ‘வசூல்ராஜா’ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ‘கலக்கப் போவது யாரு’ பாடல் பாடும் வாய்ப்பு சத்யனுக்கு கிடைத்தது. இந்த பாடல் பெற்ற வரவேற்பால் தொடர்ந்து அவருக்கு பல்வேறு இசையமைப்பாளர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

யுவன் இசையில் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் ‘சில் சில் மழையே’ என்ற பாடல், ‘நேபாளி’ படத்தில் இடம்பெற்ற இன்றும் ரசிக்கப்படும் ‘கனவிலே’ பாடல், ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் வரும் ‘பாஸு பாஸு’, ‘கழுகு’ படத்தின் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’, ‘மாற்றான்’ படத்தில் வரும் ‘தீயே தீயே’ போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பலவற்றை சத்யன் பாடியிருக்கிறார்.

இப்படியாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் சத்யன். அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பாடி வருகிறார். 2008-ம் ஆண்டு வெளியான ‘விழித்திரு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆனார் சத்யன். டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா குரலில் இலங்கையில் உள்ள நல்லூர் முருகன் கோயிலுக்காக ஒரு பக்திப் பாடலையும் இசையமைத்திருக்கிறார். இவருடைய ‘அஸ்த்ராஸ்’ இசைக் குழு உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது.

எனினும் பலரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிய கரோனா பரவல் சத்யனை விட்டுவைக்கவில்லை. ஊரடங்கின்போது வாய்ப்பு இல்லாததால் பொருளாதார தேவைக்காக அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் பராமரிப்பு பணிகளுக்காக நான்கு மாதங்கள் வேலைக்குச் சென்றதாக பகிர்ந்துள்ளார்.

இப்படியான சூழலில்தான் 26 ஆண்டுகளுக்கு முன்பாக மேடைக் கச்சேரி ஒன்றில் ‘காதலர் தினம்’ படத்தில் வரும் ‘ரோஜா ரோஜா’ பாடலை சத்யன் பாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில் காற்றில் பறக்கும் தலைமுடியுடன் எந்த சிரமமும் இன்றி மிக அநாயசமாக தன்னுடைய இனிமையான குரலில் பாடும் சத்யனை ஒட்டுமொத்த தமிழ் இணைய வெளியும் பாராட்டி வருகிறது.

இதில் இன்னொரு கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த வீடியோவில் சத்யனுடன் இணைந்து கோரஸ் பாடிய பெண் தான் இப்போது அவருடைய வாழ்க்கைத் துணையாக இருக்கும் நித்யா ரங்கராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலான பாடல்களை இசையமைப்பாளர்களே பாடி விடுவதால் பெரிய பாடகர்களுக்கே சரியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் நூற்றுக்கணக்கான புதிய பாடர்களை அறிமுகப்படுத்தியது மட்டுமின்றி தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து வந்தனர்.

அதைப் பின்பற்றி இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் சத்யன் போன்ற அதிகம் பயன்படுத்தப்படாத திறமையான பாடகர்களின் குரல்கள் தமிழ் திரைப்பட பாடல்களில் ஒலிக்க வேண்டும் என்பதே இசை ஆர்வலர்களின் விருப்பம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x