Published : 10 Sep 2025 07:13 AM
Last Updated : 10 Sep 2025 07:13 AM

சமூக வலைதளங்களில் ஏராளமான மன நோயாளிகள்! - தங்கர் பச்சான் காட்டம்

வ.கவுதமன் இயக்கி நடித்துள்ள படம், ‘படையாண்ட மாவீரா'. காடுவெட்டி குரு-வின் வாழ்க்கைக் கதையான இதில், சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விகே புரொடக் ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணன்ராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயாரித்துள்ளனர். சுஷ்மா சினிஆர்ட்ஸ் ஜி.என்.அழகர் இப்படத்தை செப்.19-ல்வெளியிடுகிறார். இதன், செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் தங்கர் பச்சான், நடிகர்ஏகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

தங்கர் பச்சான் பேசும்போது, “இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள், தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் மொழிதான். இதற்கு எதிராகவும் தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும், எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள். தமிழர் அல்லாதவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் அறிந்து கொண்டு தமிழர்களிடையே பாகுபாட்டை, விரோதத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் கமென்டுகள், ஃபாலோயர்கள் என்ற பெயரில் ஏராளமான மன நோயாளிகள் வலம் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஓர் அரசியல் கட்சியின் கொத்தடிமைகளாக- கைக்கூலிகளாக இருக்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தால், என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். மாவீரன் குருவுடன் நாங்கள் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாகப் பழகி இருக்கிறோம். அவர் இளகிய மனம் கொண்டவர். இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மக்களிடத்தில் தாக்கம் ஏற்பட வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x