Published : 02 Sep 2025 01:37 PM
Last Updated : 02 Sep 2025 01:37 PM

‘கண் படுமே பிறர் கண் படுமே வெளியே வரலாமா?’ - காத்திருந்த கண்கள்

இந்திய திரைத்துறையின் ஆரம்ப காலகட்ட வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவர் டி.பிரகாஷ் ராவ். தமிழ், தெலுங்கு, இந்தியில் 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார் அவர். அதில், தமிழில் அமர தீபம், மாதர்குல மாணிக்கம், உத்தமபுத்திரன், படகோட்டி ஆகிய படங்கள் முக்கியமானவை. அவர், வங்க மொழி படத்தின் பாதிப்பில், தமிழில் இயக்கிய திரைப்படம், ‘காத்திருந்த கண்கள்’.

அப்போதைய தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும் வங்க மொழி நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்தே உருவாக்கப் பட்டன. இதுவும் அப்படித்தான். அங்கு ‘ஸ்மிரிதி டுக்கு தக்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த நாடகத்தை அதே பெயரில் திரைப் படமாக்கினார்கள்.

படம் வெற்றி பெற்றதை அடுத்து அதை தமிழில் ரீமேக் செய்தார், டி.பிரகாஷ் ராவ். திரைக்கதையை எம்.எஸ்.சோலைமலை எழுத, வசனத்தை மா.ரா எழுதினார். விஸ்வநாதன்-ராமமுர்த்தி இசை அமைத்தனர். கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.

‘ஜெமினி’ கணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி. ரங்கா ராவ், கே.பாலாஜி, வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என். லட்சுமி, என்.ஆர். சந்தியா, பண்டரி பாய், வி.எஸ். ராகவன், எஸ்.ராமராவ் மற்றும் கரிகோல் ராஜ் என பலர் நடித்தனர். வறுமை காரணமாகப் பிறக்கும்போதே பிரிகிறார்கள், இரட்டை சகோதரிகளான லலிதாவும் செண்பகமும்.

லலிதாவை, செல்வந்தரான ரங்கா ராவ் வளர்க்கிறார். செண்பகத்தை, ஏழை தாயான எஸ்.என். லட்சுமி வளர்க்கிறார். உடல் நலமில்லாத லட்சுமிக்குச் சிகிச்சை அளிக்க வருகிறார், மருத்துவர் ஜெமினி கணேசன். செண்பகம் அவரை காதலிக்க, அவர் கண்டுகொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் மரணப்படுக்கைக்குச் சென்றுவிடும் லட்சுமி, தனது மகளுக்கு ஒரு மூத்த சகோதரி இருப்பதைச் சொல்கிறார். இதையடுத்து, தனது சகோதரியைத் தேடிச் செல்கிறார் செண்பகம். இருவரும் ஒரே ரயில் பயணிக்கும்போது விபத்து ஏற்படுகிறது. இப்போது சகோதரிகளில் லலிதா, செண்பகமாகவும் செண்பகம் லலிதாவாகவும் மாறிவிட, பிறகு என்ன நடக்கிறது என்பது திரைக்கதை. சாவித்திரி, இரண்டு வேடங்களில் நடித்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பாடல்களும் காரணமாக அமைந்தன. சீர்காழி கோவிந்தராஜன் குரலில், ‘ஓடம் நதியினிலே...’, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய, ‘காற்று வந்தால் தலை சாயும் நாணல்’, ‘கண் படுமே பிறர் கண் படுமே நீ வெளியே வரலாமா?’, ‘துள்ளித் திரிந்த பெண்ணொன்று’, ‘வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’, சுசீலா பாடிய, ‘வா என்றது உருவம்’ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாயின. 1962-ம் ஆண்டு ஆக.25-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தை, வசுமதி பிக்சர்ஸ் சார்பில், டி.கே.ராமசாமி தயாரித்தார். கமால் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x