Published : 30 Aug 2025 12:57 PM
Last Updated : 30 Aug 2025 12:57 PM
‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் இயக்குநர் எஸ்.என். சக்திவேல் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.
90-களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை தொடர் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. இந்த தொடர் அப்போதும் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஸ்ரீபிரியா, நளினி, தேவதர்ஷினி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்தனர். இதில் ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பெற்ற வரவேற்புதான் அவர் தமிழ் சினிமாவில் நுழைய காரணமாக அமைந்தது.
இத்தொடரின் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 2015-ல் வெளியான ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார். பிறகு ‘பட்ஜெட் குடும்பம்’ என்ற சீரியலையும் இயக்கினார்.
எஸ்.என்.சக்திவேல் மறைவுக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், “எஸ்.என்.சக்திவேல் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய நலம் விரும்பி. ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தின் மூலமாக தமிழக மக்களிடையே எனக்கு பெயர் கிடைத்து இந்த அளவுக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு சக்திவேல்தான் காரணம்.
இன்று அதிகாலை அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டது எனக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. போராட்டம்தான் அவர் வாழ்க்கை. அவரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும். இனிமேல் எந்த பிறப்பில் பார்க்கப் போகிறோம் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT