Published : 29 Aug 2025 04:56 PM
Last Updated : 29 Aug 2025 04:56 PM
சென்னை: ‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கியும், மாற்றியமைத்தும், சென்சார் போர்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விண்ணப்பத்தை பெற்ற இரண்டு வாரங்களில் சான்று வழங்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது. இதை எதிர்த்து பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆகஸ்ட் 24-ஆம் தேதி மனுஷி திரைப்படத்தை பார்த்தார். இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், படத்தில் கடவுள், அறிவியல் நம்பிக்கை, சித்தாந்தம், அடையாளம் ஆகியவை குறித்து வெளிப்படையான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்சார் போர்டு நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்த சில காட்சிகளை நீக்க வேண்டாம் எனவும், சில காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, சில காட்சிகள், வசனங்களை நீக்கி, மாற்றியமைத்து 2 வாரங்களில் சென்சார் போர்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், சென்சார் போர்டு இரண்டு வாரங்களில் உரிய சான்றிதழை வழங்க உத்தரவிட்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT