Published : 29 Aug 2025 04:12 PM
Last Updated : 29 Aug 2025 04:12 PM
சென்னை: “என் வயிற்றில் வளரும் கருவை கலைக்கச் சொல்லி, நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை அடித்துத் துன்புறுத்தினார்” என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த அந்தப் புகாரில், “என்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார். அவர்தான் என் குழந்தையின் அப்பா” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் அறிவித்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் ஜாய் கிரிசில்டா. இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவொரு பதிவையும் இதுவரை வெளியிடவில்லை. அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், தன்னை தாக்கியதாகவும் கூறி ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையரகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். புகார் அளித்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிரிசில்டா, “நான் ஜாய் கிரிசில்டா. மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி. நான் இப்போது காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் இப்போது என்னோடு தொடர்பில் இல்லை. அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர்தான் என் குழந்தையின் அப்பா. அவர் இதற்கு ஒரு பதில் சொல்ல வேண்டும்.
நானும் மாதம்பட்டி ரங்கராஜும் சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அவர் மனைவியை பிரிந்து வாழ்வதாக சொன்னார். அதனை நம்பிதான் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு இரு ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஆர்.சி. நகர் திருவேதி அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், எங்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை.
நான் இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். இப்போது ஒன்றரை மாதங்களாக அவர் என்னோடு தொடர்பில் இல்லை. நான் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். அவரை என்னிடம் பேச விடாமல் பலரும் தடை போட்டு வைத்துள்ளனர். அது அவரது நண்பர்களாகவோ, தம்பியாகவோ இருக்கலாம். நான் அவரோடு வாழ வேண்டும், அதற்காகவே புகார் அளித்துள்ளேன்.
நான் எங்கள் திருமணம், குழந்தை உருவாகியிருப்பது குறித்து வெளியே சொன்னதற்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னை சந்தித்தார். கருவைக் கலைக்கச் சொல்லி என்னை அடித்து துன்புறுத்தினார். ஒரு வாரத்துக்கு முன்பு அவரிடம் பேச முயன்றபோது என்னை பலர் முன்னிலையில் தாக்கினார்" என்று ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT