Published : 25 Aug 2025 09:34 AM
Last Updated : 25 Aug 2025 09:34 AM
பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா, பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார். திரையுலகில் 45-வது வருடத்தை எட்டியிருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 17 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
அவர், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கே.எஸ்.சித்ரா கூறும்போது, “தொழில்நுட்பத்தால் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் அது சில நேரங்களில் சாதாரண தன்மையைத்தான் உண்டாக்குகின்றன. இப்போது, ஒரு பாடலை முணுமுணுக்கத் தெரிந்த ஒருவர் கூட அதை டிஜிட்டலில் மாற்றி நல்ல பாடலை போல, காட்ட முடியும். ஆனால் உண்மையான கலை என்பது கற்றுக் கொள்ளும் மனப்பாங்கு, தொடர்ந்து பயிற்சி செய்வது, திறமையை இயல்பாக வெளிப்படுத்துவதில்தான் இருக்கிறது.
தொழில்நுட்பம் உதவியாக இருக்கலாம், ஆனால் அதன் மூலம் உண்மையான திறமையை மாற்ற முடியாது. செயற்கை நுண்ணறிவு வந்தாலும், உண்மையான கலைஞனை அத்தொழில்நுட்பத்தால் மாற்ற முடியாது என்று நம்புகிறேன். ரியாலிட்டி ஷோக்கள், சரியான திறமைகளுக்கு வாய்ப்பு வழங்குகின்றன.
ஒரு பாடகர் எப்படி முன்னேறுகிறார் என்பதை அங்குப் பார்க்கலாம். சரியான வழிகாட்டுதல் கிடைத்தால், அவர்களின் தன்னம்பிக்கை, மேடை இயல்பு, குரல் எல்லாமே மேம்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT